சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), இரண்டாம் கட்டத்தின் 4வது காரிடார் (பூந்தமல்லி–லைட் ஹவுஸ்) பணி வடபழனியில் முக்கிய மைல்கல்லை நிறைவு செய்துள்ளது.

இந்த பகுதியில், புதிய காரிடார்-4 பாதை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள காரிடார்-2 மற்றும் பரபரப்பான மேம்பாலத்தை கடக்கிறது. இதற்காக, போக்குவரத்து மற்றும் மெட்ரோ சேவைக்கு இடையூறு இல்லாமல் 1வது மட்டத்தில் புதிய வழிப்பாதை கட்டப்பட்டது.

முதல் கட்ட மெட்ரோ வழித்தடத்தின் சவாலான 45 மீட்டர் இடைவெளி மற்றும் கனரக வாகன இயக்கம் காரணமாக, வழக்கமான கிரேன் முறைக்கு பதிலாக ‘லஞ்சிங் கர்டர்’ முறை பயன்படுத்தப்பட்டது.

23 மீட்டர் நீளமும், 10.46 மீட்டர் அகலமும் கொண்ட தாங்கிப் பிடிக்கும் சிறப்பு அமைப்பு வடிவமைக்கப்பட்டது. இதில் 470 கன மீட்டர் கான்கிரீட் பயன்படுத்தப்பட்டது மற்றும் சுமார் 1,200 மெட்ரிக் டன் எடை கொண்டது.

வடபழனி நிலையம் மூன்று நிலைகளுடன் வணிக மற்றும் தளப்பகுதிகளை உள்ளடக்கியதாக கட்டப்படுகிறது. பணி முடிந்தவுடன், காரிடார்-4, ஏற்கனவே உள்ள மெட்ரோ நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டு, ஆற்காடு சாலையில் பயண வசதி மேம்படும் என CMRL தெரிவித்துள்ளது.