அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புதிய பிரகடனத்தில், H-1B விசா விண்ணப்பங்களுக்கு $100,000 கட்டணம் விதிக்கப்படும் என்றும் இந்த உத்தரவு 2025 செப்டம்பர் 21, அதிகாலை 12:01 மணிக்கு அமலுக்கு வரும் என்றும் அறிவித்தார்.

இதனையடுத்து பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் H-1B விசா வைத்துள்ள தங்கள் நிறுவனத்தின் வெளிநாட்டு ஊழியர்களை உடனடியாக அமெரிக்கா திரும்புமாறு அவசர அழைப்பு விடுத்தது.

இந்த அவசர அழைப்பால் அமெரிக்கா மட்டுமன்றி உலகநாடுகள் அதிலும் குறிப்பாக இந்தியாவில் பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில் H-1B விசா கட்டணம் குறித்த அமெரிக்க அதிபரின் உத்தரவு குறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், இது வருடாந்திர கட்டணம் அல்ல. இது மனுவிற்கு மட்டுமே பொருந்தும் ஒரு முறை கட்டணம்.

ஏற்கனவே H-1B விசாக்களை வைத்திருப்பவர்கள் மற்றும் தற்போது நாட்டிற்கு வெளியே இருப்பவர்கள் மீண்டும் நுழைவதற்கு $100,000 வசூலிக்கப்படாது.

H-1B விசா வைத்திருப்பவர்கள் அவர்கள் வழக்கம்போல நாட்டில் இருந்து வெளியேறி மீண்டும் நுழையலாம்; நேற்றைய உத்தரவு இதில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இது புதிய விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும், புதுப்பித்தல்களுக்கு அல்ல, தற்போதைய விசா வைத்திருப்பவர்களுக்கு அல்ல. இது முதலில் அடுத்த வரவிருக்கும் லாட்டரி சுழற்சியில் நடைமுறைக்கு வரும்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.