அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புதிய பிரகடனத்தில், H-1B விசா விண்ணப்பங்களுக்கு ஆண்டுதோறும் $100,000 கட்டணம் விதிக்கப்படும் என்று கூறினார்.
இந்த மாற்றம் தொழில்நுட்ப மற்றும் நிதி துறைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நேரடியாக பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இதனால், அமேசான், மைக்ரோசாப்ட், கூகிள் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்கள் உடனடியாக தங்கள் ஊழியர்களுக்கு மெமோக்களை அனுப்பியுள்ளன.
அந்த மெமோக்களில், ஊழியர்கள் “தற்போது நாட்டிலேயே இருங்கள்” என்று அறிவுறுத்தப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைக்குள் அமெரிக்காவுக்கு திரும்ப வேண்டிய அவசியம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

H-1B விசா விண்ணப்ப கட்டண மாற்றம் குறித்த அமெரிக்க அதிபரின் அறிவிப்பு 2025 செப்டம்பர் 21, அதிகாலை 12:01 மணிக்கு (பசிபிக் நேரம் இரவு 9:01) அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்திற்குப் பிறகு, H-1B விசா வைத்திருப்பவர்கள் கூடுதல் $100,000 கட்டணம் செலுத்தாமல் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது என்று எச்சரித்துள்ள இந்த நிறுவனங்கள் செப்டம்பர் 21, 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 12:00 மணிக்கு முன் (பி.டி.டி.) அமெரிக்கா திரும்ப அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அவ்வாறு வர முடியாதவர்கள் செய்ய வேண்டியது குறித்தும் அந்த மெமோக்களில் குறிப்பிட்டுள்ளது.
இந்த மெமோக்களை பிசினஸ் இன்சைடர் மதிப்பாய்வு செய்து வெளியிட்டுள்ளது.
அமேசான் பரிந்துரைகள் :
• அமெரிக்காவில் இருக்கும் H-1B ஊழியர்கள்: நாட்டை விட்டு வெளியே செல்லாமல் இருங்கள்.
• H-4 சார்பு விசா வைத்திருப்பவர்கள்: உத்தரவில் குறிப்பிடப்படாதபோதிலும், அமெரிக்காவிலேயே இருக்கவும்.
• அமெரிக்காவிற்கு வெளியே இருக்கும் H-1B மற்றும் H-4 ஊழியர்கள்: முடிந்தால், செப்டம்பர் 21, 2025 காலை 12:00 மணிக்கு (PDT) முன் திரும்பி வர முயற்சிக்கவும்.
• காலக்கெடுவிற்கு பிறகு திரும்ப முடியாதவர்கள்: புதிய வழிகாட்டுதல்கள் வரும் வரை நுழைய முயல வேண்டாம்.
அமேசான், இந்த நிலைமையை கவனமாக கண்காணித்து, தொடர்ந்து புதுப்பிப்புகளை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் பரிந்துரைகள்:
• அமெரிக்காவில் இருக்கும் H-1B ஊழியர்கள்: நாட்டை விட்டு செல்ல வேண்டாம். பயணத் திட்டங்கள் இருந்தாலும், அமெரிக்காவில் தங்குவது அவசியம்.
• H-4 சார்பு விசா வைத்திருப்பவர்கள்: உத்தரவில் குறிப்பிடப்படாதபோதும், அமெரிக்காவிலேயே இருக்கவும்.
• வெளிநாட்டில் இருக்கும் H-1B மற்றும் H-4 ஊழியர்கள்: நாளைய காலக்கெடுவிற்கு முன் திரும்ப முயற்சிக்கவும். முடியாவிட்டால், மைக்ரோசாப்ட் வழங்கிய நுழைவுப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஊழியரின் நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து, அடுத்த 28 மணி நேரத்தில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் என்று மைக்ரோசாப்ட் உறுதியளித்துள்ளது.
இந்த புதிய உத்தரவு மற்ற விசா வகைகளுக்கு (L-1, TN போன்றவை) எந்த பாதிப்பும் இல்லை என்று மைக்ரோசாப்ட் தெளிவுபடுத்தியுள்ளது.
H-1B நீட்டிப்புகள் மற்றும் நிலை மாற்றங்கள் குறித்து மேலும் தகவல்கள் பின்னர் வழங்கப்படும்.
“இந்த நிலைமை பலருக்கு பதட்டத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், எங்கள் பரிந்துரைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று ஊழியர்களை மைக்ரோசாப்ட் அறிவுறுத்தியுள்ளது.
கூகிள் பரிந்துரைகள்:
• அமெரிக்காவிற்கு வெளியே உள்ள H-1B ஊழியர்கள்: காலக்கெடுவிற்கு முன், சனிக்கிழமை இரவுக்குள் திரும்ப முயற்சிக்கவும்.
• அமெரிக்காவில் உள்ள H-1B ஊழியர்கள்: சர்வதேச பயணத்தைத் தவிர்க்கவும். நாட்டை விட்டு வெளியேறுவது மறு நுழைவு சிக்கல்களை உருவாக்கும்.
• காலக்கெடுவிற்கு முன் திரும்ப முடியாதவர்கள்: “go/immigration-help” மூலம் உதவியை நாடவும்.
“இந்த நிலைமை சவாலாக இருக்கலாம், ஆனால் நாங்கள் உங்களை ஆதரிக்க இருக்கிறோம். நிலைமையை கவனமாக கண்காணித்து வருகிறோம்” என்று கூகிள் தெரிவித்துள்ளது.
கோல்ட்மேன் சாக்ஸ் பரிந்துரைகள்:
• H-1B விசா ஊழியர்கள் சர்வதேச பயணங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
• ஊழியர்கள் தங்களின் ஃப்ராகோமென் (Fragomen) பிரதிநிதியுடன் தொடர்பில் இருத்தல் அவசியம்.
• கேள்விகள் இருப்பின், HCM அமெரிக்காஸ் குடியேற்ற குழுவுக்கும், ஃப்ராகோமெனின் வழிகாட்டுதலுக்கும் அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஃப்ராகோமென் என்பது உலகளாவிய குடியேற்ற வழக்குகளை கையாளும் சட்ட நிறுவனம்.
H-1B விசா நடைமுறைகள் குறித்து கூடுதல் விவரங்கள் கிடைக்கும்போது ஊழியர்களுக்கு உடனடியாக தகவல் தருவதாக கோல்ட்மேன் சாக்ஸ் உறுதியளித்துள்ளது.
இருந்தபோதும், மெமோக்கள் குறித்து இந்நிறுவனங்களை தொடர்பு கொண்டும் அவர்களிடம் இருந்து இதுகுறித்து பதில் கிடைக்கவில்லை என்று பிசினஸ் இன்சைடர் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.