விசா கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று உத்தரவிட்டுள்ளார், அதேவேளையில், இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (ஐடி) சேவை நிறுவனங்கள் H-1B விசாக்களை நம்பியிருப்பதை பெருமளவு குறைத்துவருகின்றன.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), இன்ஃபோசிஸ், எச்சிஎல்டெக், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை இப்போது வட அமெரிக்காவில் பணியாளர்களை நியமிக்க H-1B விசாக்களை 20 சதவீதம் முதல் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே சார்ந்துள்ளதால் விசா கட்டண உயர்வால் இந்திய IT நிறுவனங்களுக்கு பாதிப்பில்லை என்று மணிகண்ட்ரோல் குறிப்பிட்டுள்ளது.

H-1B விசாக்கள் அமெரிக்க நிறுவனங்கள் STEM மற்றும் IT போன்ற சிறப்புத் துறைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கின்றன.
மேலும், FY15 மற்றும் FY23 க்கு இடையில், இந்தியாவின் முதல் ஏழு IT நிறுவனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்கள் 56 சதவீதம் குறைந்து 6,700 ஆக இருந்தது.
இன்ஃபோசிஸ் மற்றும் TCS போன்ற நிறுவனங்கள் இப்போது அமெரிக்காவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான உள்ளூர் ஊழியர்களைப் பணியமர்த்துகின்றன, இதனால் விசா சார்ந்திருத்தல் குறைகிறது.
HCLTech மற்றும் Wipro ஆகியவை 20 சதவீதம் மட்டுமே H-1B விசா பணியாளர்களை சார்ந்துள்ளது. அமெரிக்காவில் இந்நிறுவனங்கள் கிட்டத்தட்ட 80 சதவீதம் உள்ளூர்வாசிகளை பணியமர்த்துகிறார்கள்.
இந்த குறைந்த சார்பு இருந்தபோதிலும், H-1B விசா விண்ணப்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
தற்போது, H-1B விசா திட்டத்தின் மிகப்பெரிய பயனர்களாக முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. FY24 இல், அமெரிக்காவின் முதல் ஐந்து நிறுவனங்கள் சேர்ந்து கிட்டத்தட்ட 28,000 ஒப்புதல்களைப் பெற்றன, ஒரு மின்வணிக நிறுவனமே FY2025 இல் 10,000 ஒப்புதல்களுடன் முதலிடத்தில் இருந்தது.
இந்த நிறுவனங்கள் H-1Bகளை பெரும்பாலும் AI பொறியாளர்கள் மற்றும் தரவு விஞ்ஞானிகள் போன்ற சிறப்பு, அதிக ஊதியம் பெறும் பணிகளுக்குப் பயன்படுத்துகின்றன, இது அமெரிக்காவில் தொடர்ந்து திறமை பற்றாக்குறையை பிரதிபலிக்கிறது.
அமெரிக்க அரசு தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் அமேசானுக்குப் பிறகு, 5,000 க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட H-1B விசாக்களுடன் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இரண்டாவது அதிக பயனாளியாக உள்ளது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) படி, ஜூன், 2025 நிலவரப்படி, அமேசான் 10,044 தொழிலாளர்கள் H-1B விசாக்களைப் பயன்படுத்தியது. இரண்டாவது இடத்தில் 5,505 H-1B விசாக்களுடன் TCS உள்ளது.
மைக்ரோசாப்ட் (5189), மெட்டா (5123), ஆப்பிள் (4202), கூகிள் (4181), டெலாய்ட் (2353), இன்ஃபோசிஸ் (2004), விப்ரோ (1523) மற்றும் டெக் மஹிந்திரா அமெரிக்காஸ் (951) ஆகியவை பிற சிறந்த பயனாளிகள்.
$100,000 H-1B கட்டணம் இந்திய IT நிறுவனத்திற்கு குறுகிய கால இடையூறு மற்றும் லாப அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று EIIRtrend இன் பரீக் ஜெயின் நம்புகிறார். மேலும், சுறுசுறுப்பான நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.