வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், எச்1பி விசாவுக்கான விண்ணப்ப கட்டணத்தை 1லட்சம் டாலர் ( 88 லட்சம் ரூபாய்)  வரை அதிகரித்து உத்தரவிட்டுள்ளார். இது  பணி நிமித்தமாக அமெரிக்க செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் 2வது முறையாக அதிபராக பதவி ஏற்றபிறகு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பல நாடுகளின் வரிகளை உயர்த்தி உள்ளதுடன்,  வெளிநாடுகளில் இருந்து வேலை மற்றும் படிப்புக்காக, அமெரிக்கா வருபவர்களுக்கான விசா மற்றும் குடியுரிமை விதிகளை கடுமையாக்கியுள்ளார். சமீபத்தில் இந்தியா மீதான வரிகளை ரூ.50 சதவிகிதம் அளவுக்கு உயர்த்தி, இந்தியாவின் பொருளதாரத்தை சீர்குலைக்க முயற்சித்து வருகிறார்.

இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான பொறியாலளர்கள்  அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். கூகுள் உள்பட பிரபல நிறுவனங்களில் தலைமை பதவியில் இந்தியர்களே பணியாற்றி வருகின்றனர். தற்போது அவர்களுக்கான ஹெச்1பி விசா மீதும் டிரம்ப் கை வைத்துள்ளார்.

அமெரிக்க  நிறுவனங்கள் வெளிநாட்டை சேர்ந்த திறன்  ஊழியர்களை தங்கள் நாட்டில் பணிக்கு அமர்த்துவதற்கு ஹெச்1பி விசாவை தான் பயன்படுத்துகின்றன.  அதன்படி, இந்தியர்கள் பெரும்பாலோர் எச்பி1 விசாவில்தான் அங்கு பணியாற்றி வருகின்றனர்.  இந்த நிலையில் டிரம்ப்,  ஹெச்1பி  விசா நடைமுறையில் பல்வேறு நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்திருக்கிறார் .

அமெரிக்காவுக்கு வேலைக்காக வரும் வெளிநாட்டவருக்கான எச்1பி விசா வழங்கும் நடைமுறையில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளார். செப்டம்பர் 19ந்தேதி (வெள்ளிக்கிழமை)  டிரம்ப் நிர்வாகம், வெளிநாடுகளைச் சேர்ந்த டெக்கிகளால் மிகவும் விரும்பப்படும் H-1B விசா திட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி, எச்1பி விசாவுக்கான விண்ணப்ப கட்டணம், இதுவரை 1லட்சத்து 32ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது, ஆண்டுக்கு  88 லட்சம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளார். அதாவது,  அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் ஆண்டுக்கு $100,000  (இந்திய மதிப்பில் ரூ.80 லட்சம்) கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த கட்டண உயர்வு செப். 21 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  அடுத்த 12 மாதங்களுக்கு செயலில் இருக்கும்; உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவிற்குள் நுழைபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என தெரிவித்த நிலையில்,   வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இது செயல்படுத்தப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

2024ல் H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், இனிமேல், விசா நடவடிக்கையால், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசா முறைகளில் ஒன்று எச்1பி விசா. அமெரிக்க  செய்ய முடியாத பணிகளை செய்யக்கூடிய வெளிநாட்டவர்களை பணியமர்த்துவதற்காக மட்டுமே இது பயன்படுத்த வேண்டும். இந்த அறிவிப்பு மூலம் வெளிநாட்டவர்களை பணியமர்த்தும் அமெரிக்க நிறுவனங்கள் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டும். இதன்மூலம், உண்மையிலேயே திறமையான, அமெரிக்க தொழிலாளர்களால் செய்ய முடியாததை செய்யக் கூடியவர்களாக அவர்கள் இருப்பதை உறுதி செய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.