2008 ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று உலகின் கவனத்தை ஈர்த்தவர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த ஓட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட்.

2012, 2016 ஒலிம்பிக் போட்டியில் கூடுதலாக 4×100 மீட்டர் ரிலேவிலும் தங்கம் வென்று தடகள போட்டிகளில் மொத்தம் 8 ஒலிம்பிக் தங்கம் வென்ற வீரர் என்ற உலக சாதனையை ஏற்படுத்தினார்.

8 ஒலிம்பிக் தங்கம் வெல்ல மைதானத்தில் இவர் ஓடிய நேரம் 115 வினாடிகள், அதாவது 2 நிமிடத்திற்கும் குறைவானது.

2017ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டிகளில் தங்கம் வென்று தொடர்ந்து 11 முறை தங்கம் வென்ற வீரர் என்ற பெருமையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் உசைன் போல்ட்.

1000 கோடி ரூபாய் பரிசுப் பணத்துடன் 31 வயதில் ஓய்வுபெற்ற ரன்னிங் மெஷின் என்று வர்ணிக்கப்பட்ட உசைன் போல்ட் பல இளைஞர்களுக்கு உந்துசக்தியாக விளங்கினார்.

தற்போது 39 வயதாகும் அவர் ஸ்கோலியோசிஸ் காரணமாக ஏற்பட்டுள்ள முதுகெலும்பு பிரச்சினையால் மாடிப்படி கூட ஏறமுடியாமல் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருவதாக ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இருந்தபோதும், உடற்பயிற்சியை கைவிடாத போல்ட் அவ்வப்போது நிபுணர்கள் மேற்பார்வையுடன் பிசியோதெரபி, முதுகுத்தண்டை வலுப்படுத்தும் பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.

மேலும் தனது குழந்தைகளான ஒலிம்பியா லைட்னிங், செயின்ட் லியோ மற்றும் தண்டர் ஆகியோருடன் நேரத்தைச் செலவழிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

“பொதுவாக, நான் குழந்தைகள் பள்ளிக்கு கிளம்புவதை கவனிக்க சரியான நேரத்தில் எழுந்திருப்பேன், பின்னர் அன்றைய தினம் நான் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பொறுத்தது.

எனக்கு எதுவும் வேலையில்லை என்றால், நான் அமைதியாக இருப்பேன். நான் நல்ல மனநிலையில் இருந்தால் சில நேரங்களில் உடற்பயிற்சி செய்வேன். நான் சில தொடர்களைப் பார்ப்பேன், குழந்தைகள் வீட்டிற்கு வரும் வரை அமைதியாக இருப்பேன்.

அவர்கள் என்னைத் தொந்தரவு செய்யத் தொடங்கும் வரை நான் அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுகிறேன்.

பின்னர், நான் வீட்டிலேயே இருந்து திரைப்படங்களைப் பார்க்கிறேன், அல்லது இப்போது எனக்கு லெகோ (ஒருவகையான பில்டிங் பிளாக்) விளையாடப் பிடிக்கும், அதனால் நான் லெகோவைச் செய்கிறேன்,” என்று போல்ட் தி கார்டியனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தடகள வரலாற்றில் உலகின் வேகமான ஓட்டப்பந்தய வீரராகத் திகழ்ந்த உசைன் போல்ட் தனது கடின உழைப்பு மற்றும் ஒழுக்கத்தால் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ரன்னிங் மெஷின் என்று புகழப்பட்ட உசேன் போல்ட் ஸ்கோலியோசிஸ் காரணமாக படியேறக்கூட சிரமப்படுவதாகக் கூறியிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

ஸ்கோலியோசிஸ் என்பது முதுகெலும்பு C அல்லது S வடிவத்தில் வளைந்து போகும் ஒரு நிலை. சில சந்தர்ப்பங்களில், இந்த நிலை பிறப்பிலிருந்தே இருக்கலாம், ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது இளமைப் பருவத்தில் உருவாகிறது. லேசான முதுகுவலி, சீரற்ற இடுப்பு மற்றும் நடக்கும்போது கடுமையான வலி ஆகியவை ஆரம்ப அறிகுறிகளாகும்.

தவிர, படிக்கட்டுகளில் ஏறும்போது மூச்சுத் திணறல், வேகமாக ஓடுவதில் சிரமம் அல்லது நடப்பதில் சிரமம் மற்றும் முதுகுத்தண்டு வலி ஆகியவை இந்த நிலையின் பொதுவான அறிகுறிகளாகும்.

ஸ்கோலியோசிஸால் ஏற்படும் முதுகெலும்பின் வளைவை உடனடியாக சரிசெய்யாவிட்டால், அது முதுகெலும்பில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும், இது நடக்க சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் நுரையீரலையும் பாதிக்கும் மற்றும் எந்தவொரு செயலின் போதும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்.

எனவே, வயதுக்கு ஏற்ப அறிகுறிகள் மோசமடையக்கூடும் என்றாலும், இந்த நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது முக்கியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.