சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ (முன்னாள்) நாளேடான நமது எம்ஜிஆர் ஆசிரியரும் ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளருமான மருது அழகுராஜ் நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இவர் அதிமுகவின் செய்திதொடர்பாளராகவும் இருந்து வந்தார்.

கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பாக போட்டியிட்ட மருது அழகுராஜ், நமது அம்மா எனும் அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி நாளிதழில் 2018 முதல் 2022 வரை தலைமை ஆசிரியராக இருந்தார். இவர் சிறந்த தமிழ் பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போற்றுதலுக்கு உரியவர்.
ஜெ.மறைவைத் தொடர்ந்து, இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த நிலையில், அதிமுகவில் நடைபெற்ற அதிரடி மாற்றங்களால் ஓபிஎஸ் கட்சியில் இருந்து ஓரங்கப்பட்ட நிலையில், அழகு மருதுராஜ் நமது எம்ஜிஆர் பத்திரிகையில் இருந்து விலகி ஒபிஎஸ்க்கு ஆதரவாக பணியாற்றி வந்தார். தற்போது ஓபிஎஸ்-சும் செல்லாக்காசி விட்ட நிலையில், தனது எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, திமுகவில் இணைத்துக்கொண்டார்.
திமுகவில் இணைந்தது குறித்து மருது அழகுராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, அபகரிப்பு அரசியலில் இருந்து அரவணைக்கும் அரசியலை நோக்கி நகர்ந்திருக்கிறேன். 20 வருடமாக அதிமுகவிற்கு என்னுடைய தமிழ், எழுத்து, பேச்சையும் ஒப்படைத்து உழைத்தவன். எடப்பாடியின் அபகரிப்பு அரசியலை, ஆக்கிரமிப்பு அரசியலை ஜனநாயகத்திற்கு புறம்பானது என கண்டித்த காரணத்தினால் அங்கிருந்து விலக்கப்பட்டேன். அதிமுக-வை எடப்பாடி பழனிசாமி அபரிகரித்தார். இப்போது அதிமுகவை பாஜக அபகரித்துள்ளது.
எம்ஜிஆர் காலத்தில் திராவிடக்கழகம் ஒன்றிணைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அது முடியாமல் போனது. தற்போது எடப்பாடி பழனிசாமி புண்ணியத்தில் திராவிட இயக்கம் ஒன்றாகக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அன்வர்ராஜா வந்துள்ளார். நான் வந்துள்ளேன். இன்னும் பல்லாயிரம் மற்றும் பல லட்சம் பேர் வருவார்கள். எடப்பாடி பழனிசாமியே ஆசி கொடுத்து அனுப்பி வைப்பார்.
திமுக கட்சியை வலப்படுத்துவற்கு எடப்பாடி பழனிசாமியும் துணையாக இருக்கிறார். அவருடைய உள்ளாசை திராவிட கழகம் ஒன்றாக வேண்டும் எனக் கூட நினைக்கலாம். அதிமுக-விற்கு பல காலம் உழைத்தவர்களை நல்ல எண்ணத்துடன் அனுப்பி வைத்துள்ளார் என எடுத்துக்கொள்கிறேன்.
இவ்வாறு மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.