தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் (TNHB), சென்னை முழுவதும் அதன் புதிய வணிக வளாகங்களை மிகவும் வசதியான மையங்களாக அமைத்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
சதுர அடி ரூ. 88 முதல் ரூ. 118 வரை வாடகைக்கு வழங்கிவருகிறது. இது தனியார் வளாகங்களுக்கு கொடுக்கும் வாடகையை விட 20% குறைவாக உள்ளதை அடுத்து EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) மற்றும் GST உள்ளிட்ட துறைகள் தங்கள் அலுவலகங்களை TNHB வணிக வளாகங்களுக்கு மாற்றியுள்ளது.

TNHB ஏற்கனவே சிந்தாமணி மற்றும் அண்ணா நகரில் உள்ள அதன் வளாகங்களை TN ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட அரசு அமைப்புகளுக்கு விற்றுள்ளது.
கூடுதலாக, கே.கே. நகரில் உள்ள அசோகா காலனி, முகப்பேர், சிஐடி நகர், அரும்பாக்கம், அசோக் நகர், பீட்டர்ஸ் காலனி மற்றும் பெசன்ட் நகர் போன்ற முக்கிய இடங்களில் ஏழு வளாகங்கள் வந்துள்ளன.
மெட்ரோ இணைப்பு மற்றும் முக்கிய பகுதியில் இருப்பதால், இடவசதி தேவைப்படும் அரசு நிறுவனங்களுக்கு ஏற்றதாக இவ்வளாகங்கள் மாறிவருகின்றன.
ஒரு தளத்திற்கு 7,000 சதுர அடி முதல் 1,000 சதுர அடி வரையிலான அளவுள்ள இந்த புதிய வளாகங்கள் தனியார் வாடகை வளாகங்களுக்கு மாற்றாக மலிவு விலையில் அமைக்கப்பட்டுள்ளன.
பீட்டர்ஸ் காலனி, அசோக் நகரில் உதயம் தியேட்டர் அருகே மற்றும் அரும்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் வரவிருக்கும் புதிய வளாகங்களுக்கு பெருநிறுவனங்களை ஈர்க்க TNHB திட்டமிட்டுள்ளது.
22 மாடிகளைக் கொண்ட அசோக் நகர் வணிக வளாகம் முதல் நான்கு தளங்கள் வணிகப் பயன்பாட்டிற்கும் ஐந்தாவது தளத்தில் இருந்து குடியிருப்புகளைக் கொண்ட வளாகமாக அமைக்கப்பட்டு வருகிறது.
அரும்பாக்கத்தில் 3.5 லட்சம் சதுர அடியில் 2 பேஸ்மெண்ட் மற்றும் 11 தளங்களுடன் கூடிய வளாகம் கிட்டத்தட்ட கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பீட்டர்ஸ் காலனியில் 8.1 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டு வரும் வளாகம் 3 பேஸ்மெண்ட் மற்றும் 17 தளங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டு வருகிறது.