டெல்லி: சுதேசி என்ற மந்திரத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் தருணமாக பண்டிகைக்காலம் விளங்குகிறது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, நீங்கள் வாங்கும் பொருள்களில் இந்தியர்களின் வியர்வை இருக்கட்டும் என நாட்டு மக்களுக்கு தனது பிறந்தநாள் செய்தியாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, தனது 75வது பிறந்தநாளில், விக்ஸித் பாரதத்தை கட்டியெழுப்பும் பணியின் ஒரு பகுதியாக, ‘சுதேசி’ (இந்தியாவில் தயாரிக்கப்பட்டது) தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு குடிமக்களுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுப் பேரணியில் உரையாற்றிய அவர், 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்கு இலக்கை அடைவதற்கான பாதை ஆத்மநிர்பர் பாரத் (தன்னம்பிக்கை கொண்ட இந்தியா) என்று வலியுறுத்தினார்.
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் ‘சுதேசி’ மற்றும் அனைத்து இந்தியர்களும் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட’ பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்,

மத்திய பிரதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நேற்று தனது 75வது பிறந்தநாளை (17-09-2025) கொண்டாடினார். இந்த பிறந்தநாளை பாஜத சேவை தினம் என்ற பெயரில் அக்டோபர் 2ம் தேதி வரை கொண்டாட்ட பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏழை-எளிய மக்கள், பெண்கள் சார்ந்த மக்கள் நல திட்டங்கள், நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக பிரதமர் மத்திய பிரதேசத்தில் பல்வேறு மக்கள் நல திட்டப் பணிகளை பிரதமர் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், உரையாற்றிய பிரதமர் பேசியதாவது,
“தார் நிலம் என்றும் வீரத்திற்கு உத்வேகம் அளித்ததாக மண். மகாராஜா போஜின் துணிச்சல், நாட்டின் பெருமையைக் காப்பதில் உறுதியாக நிற்பதற்கு நமக்கு கற்றுக் கொடுக்கிறது. இந்த மரபிலிருந்து உத்வேகம் அடைந்து தற்போது இந்த அரசு பாரதத்தின் பாதுகாப்பிற்கு மிக உயரிய முன்னுரிமையை அளிக்கிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள், நமது சகோதரி மற்றும் புதல்விகளின் குங்குமத்தை அழித்தனர். ஆபரேஷன் சிந்தூர் மூலம் அவர்களுடைய பயங்கரவாத மறைவிடங்களை நாம் அழித்தோம். துணிச்சல்மிக்க நமது வீரர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாகிஸ்தானை மண்டியிடச் செய்னர்.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் பல பத்தாண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட சமூகப் பிரிவினர்களுக்கு பயனளித்துள்ளது. ஏழை விஸ்வகர்மா சகோதர சகோதரி கள் திறமையைக் கொண்டிருந்தனர். முந்தைய அரசுகள் அவர்களுடைய திறமையை மேம்படுத்தவோ, வாழ்க்கையை மேம்படுத்தவோ எந்தத் திட்டங்களையும் வகுக்கவில்லை. ஆனால், தற்போதைய அரசு அவர்களுடைய கைவினைத் திறனை முன்னேற்றமிக்கதாக மாற்றுவதற்கான வழிவகைகளை மீண்டும் உருவாக்கி யுள்ளது.
சுதேசி என்ற மந்திரத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் தருணமாக பண்டிகைக்காலம் விளங்குகிறது. மக்கள் தாங்கள் வாங்கும் அல்லது விற்பனை செய்யும் அனைத்துப் பொருட்களும் இந்தியாவில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் வாங்கும் பொருள்களில் இந்தியர்களின் வியர்வை மற்றும் மண்ணின் வாசம் இருக்க வேண்டும். மகாத்மா காந்தி சுதந்திரத்திற்கான ஒரு கருவியாக சுதேசியைப் பயன்படுத்தினர். தற்போது வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளமாக இது மாற வேண்டும்” என்பதை வலியுறுத்தினார்.