சென்னை: திமுக அரசு,  எதிர்க்கட்சிகளின் பிரச்சாரங்களுக்கு மட்டுமே ரூல்ஸ் போடுகிறது என கடுமையாக சாடியுள்ள மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,  திமுக கூட்டணி கட்சியான,  விசிக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு மட்டும் எந்த விதிமுறைகளும் விதிக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார்,   சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக பதவியேற்பு விழாவுக்கு சென்று விட்டு திரும்புவதாக கூறியவர்,  “தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

இதையடுத்து செய்தியாளர்கள், தவெக விஜய் பிரசாரத்துக்கு காவல்துறை கொடுக்கும் கெடுபிடிகள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறியவர்,    “திமுக ஆளும் கட்சியாக இருக்கும் வரை, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு ரூல்ஸ். பிற கட்சிகளுக்கு வேறு ரூல்ஸ்.  திமுகவின் கூட்டணி கட்சியான விசிக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு எந்த விதிமுறைகளும் இருக்காது, சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது.

அவ்வளவு ஏன்? திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டிற்கு அரசு பேருந்துகளே சென்றன. ஆனால், எதிர்கட்சிகள் நடத்தும் மாநாட்டுக்கோ, பிரச்சாரத்துக்கோ பேருந்துகளுக்கு தடை விதிக்கின்றனர். கொடி, பேனர் அதிகமாக வைக்கக் கூடாது என்று ரூல்ஸ் கூறுகின்றனர்.

திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் என்றால் ஆட்கள் நடமாட முடியாத அளவிற்கு பேனர்கள் வைக்கின்றனர். ஆனால், வேறு கட்சிகளின் மாநாடுகளுக்கு கூட்டம் சேரக் கூடாது என்பதற்காக பல ரூல்ஸ்களை போடுகிறார்கள்.

இதுதான் திமுக ஆட்சியின் சமத்துவம். எதிர்கட்சிகளுக்கு ஜனநாயக உரிமைகள் கிடையாது என்பதுதான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியின் ரூல்ஸ் என்று கடுமையாக சாடினார்.

மேலும்,   “சமூக வலைதளங்களிலும் எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களது கருத்தை வெளியிட்டால், அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். ஆனால், அவர்கள் மட்டும் மற்ற கட்சிகளை கிண்டல் செய்து பதிவு வெளியிடுவார்கள்” என்றவர்,  மாநிலம் முழுவதும்  “விரைவில் பாஜகவும்  பிராச்சாரத்தை தொடங்க இருப்பதாக கூறியவர், பாஜக 24 மணிநேரமும் மக்களுக்காக உழைக்கும் கட்சி. பிரதமர் மோடி 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காக அயராமல் உழைத்து கொண்டு இருக்கிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அப்படித்தான். வரும் தேர்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்” என்றார்.