சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டி உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

தனியார் மருத்துவ கல்லூரிகளில், அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் கேட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விஷயத்தில், திமுக அரசு உடனடியாக தலையிட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கூடுதல் கட்டாய கட்டண வசூலை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி உள்ளார்.
இதுதொடர்பாக பா.மக. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 22 தனியார் மருத்துவ கல்லூரிகளிலும், 4 மருத்துவ பல்கலைக் கழகங்களிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.4.35 லட்சம் முதல் ரூ.4.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே நடைபெற்ற கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டில் இடங்களை பெற்ற மாணவர்களிடம் அரசு நிர்ணயித்ததை விட ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பெரும்பாலான தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துவதாகவும், இதனை வெளியில் சொன்னால் மருத்துவ கல்வியில் தொடர முடியாது என்று அச்சுறுத்தவதாகவும் பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
எனவே, ஏழை, நடுத்தர குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவக் கனவையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, மாநில அரசு உடனடியாக தலையிட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கூடுதல் கட்டாய கட்டண வசூலை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.