இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியை நடத்துவது நாட்டின் கண்ணியத்திற்கும் மக்களின் உணர்வுக்கும் எதிராக தவறான செய்தியை வழங்குவதாக உள்ளது என ஊர்வசி ஜெயின் தலைமையிலான நான்கு சட்டக் கல்லூரி மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பான மனு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வில் தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மனுவை அவசரமாக விசாரிக்க பட்டியலிடுமாறு நீதிபதிகளிடம் வலியுறுத்தினர்.

‘கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. எங்கள் மனு வெள்ளிக்கிழமை அவசர விசாரணைக்கு பட்டியலிடப்படாவிட்டால், அது பயனற்றதாகிவிடும்’ என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

‘என்ன அவசரம்? இது ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் போட்டி, இப்போது நாம் என்ன செய்ய முடியும்? போட்டி தொடரட்டும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி செப்டம்பர் 14 அன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், “இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி நல்லிணக்கத்தையும் நட்பையும் வெளிப்படுத்தும் நோக்கம் கொண்டது.

இருப்பினும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் நமது மக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். நமது வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக தங்கள் உயிரைப் பணயம் வைத்து போராடுகிறார்கள்.

இதுபோன்ற சூழ்நிலையில், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஒரு நாட்டோடு விளையாடுவது மக்களுக்கு தவறான செய்தியை அனுப்பும்” என்று நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

“இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நடத்துவது பயங்கரவாதத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் உணர்வுகளைப் புண்படுத்தும். மேலும், நாட்டின் கண்ணியமும் குடிமக்களின் பாதுகாப்பும் பொழுதுபோக்கை விட முக்கியம்” என்று மனுதாரர்கள் தெரிவித்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும். இது ஆயுதப்படைகளின் மன உறுதியையும் குலைக்கும் என்று மனுதாரர்கள் தெரிவித்தனர்.