சென்னை: செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டும் மாநகராட்சி கெடு விதித்து அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

முன்னதாக மதுரையில் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 2025 ஜனவரி மாதம் நடந்த விசாரணையையை தொடர்ந்து, பொது இடங்களில் கொடிக்கம்பங்களை வைக்க தடை விதித்ததுடன், ஏற்கனவே உள்ள கொடிக்கம்பங்களையும், அந்தந்த கட்சியினரே அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்படி,, ‘தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் இதர துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்கள், ஏப்., 28க்குள் அகற்றப்பட வேண்டும்’ என உத்தரவிட்டது.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், மீண்டும் ஜூலை 2ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் கோபிநாத் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது குறித்து, மாவட்ட வாரியான விபரங்கள் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில் , அரியலுார், செங்கல்பட்டு, கரூர், கடலுார், நாகை உட்பட 19 மாவட்டங்களில், பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்கள் 100 சதவீதம் அகற்றப்பட்டு உள்ளன. கோவை, வேலுார், திருவாரூர், சேலம் உட்பட 11 மாவட்டங்களில், 90 சதவீதத்துக்கு மேல் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. ஏழு மாவட்டங்களில், 50 முதல் 90 சதவீதம் வரை கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டு உள்ளன.
சென்னையில் 31.94 சதவீதம் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கொடிக் கம்பங்கள், சிலைகள் நிறுவுவது தொடர்பாக, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ளன. இவற்றை இறுதி செய்வது தொடர்பாக, தலைமை செயலர் தலைமையில் வரும் 8ம் தேதி கூட்டம் நடக்க உள்ளது.
இதையடுத்து நீதிபதி, சென்னை மாநகரில் 31.94 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன; கொடிக் கம்பங்கள் அகற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை முழுமையாக செயல்படுத்துவதில் என்ன சிக்கல்’ என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், சென்னையில் நீதிமன்ற உத்தரவை 100 சதவீதம் அமல்படுத்துவதில் என்ன சிக்கல்? சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளில் கொடிக் கம்பங்கள் நட, அரசு ஏன் அனுமதி அளிக்கிறது? இது மிகவும் அபாயகரமானது. இதனால், பொது மக்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்படும். மனித உயிர்களுக்கு உரிய மதிப்பு அளிக்க மாட்டீர்களா?
கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பாக, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. நீதிமன்ற உத்தரவுபடி, 19 மாவட்டங்களில் மட்டுமே முழுமையாக கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 19 மாவட்டங்களில் முழுமையாக கொடிக் கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என கடுமையாக சாடினார்.
‘இந்த காலத்துக்குள், பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை முழுமையாக அகற்றாத கலெக்டர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்’ என, நீதிபதி எச்சரித்தார்.
பின், அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று, வ கால அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.
இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி, தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நீதிமன்ற உத்தரவுப்படி, வரும் 14ஆம் தேதிக்குள் சென்னையில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை சம்பந்தப்பட்ட கட்சியினரே அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. காலக்கெடுவுக்குள் அகற்ற தவறினால் மாநகராட்சி ஊழியர்களை கொண்டு கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு, அதற்கான செலவுத்தொகை அரசியல் கட்சிகளிடம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளது.