டெல்லி: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது குறித்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாடு தழுவிய சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான கூட்டத்தை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று நடத்தி வருகிறார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வது, அதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநில அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையத்தின் முக்கிய கூட்டம் நடந்து வருகிறது

நாடு முழுவதும் விரைவில் தீவிர வாக்காளர் திருத்த பணி நடத்த உள்ளதாகவும் இதற்காக முக்கிய ஆலோசனைகளை தேர்தல் ஆணையம் (EC- Election Commission) செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு, அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு முன்பாக இந்த சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. . இந்தியா முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) அறிமுகம் செய்ய இந்திய தேர்தல் அணையம் தீவிரமாக செயலாற்றி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
முன்னதாக, பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இறந்த வாக்காளர்கள், ஒரே நபர் பல இடங்களிலும் வாக்குரிமை, இடம்பெயர்களின் வாக்குகள், போலி வாக்காளர்கள், இந்தியர்கள் அல்லாத வெளிநாடுகளைச்சேர்ந்த அகதிகள் முறைகேடாக பெற்ற வாக்குரிமை போன்றவற்றை தகுந்த ஆவணங்கள் மூலம் தேர்தல் ஆணையம் நீக்கி நடவடிக்கை எடுத்தது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களும் வந்தன. இதனால், சுமார் 65 லட்சம் வாக்காளர்களை அதிரடியாக நீக்கிய தேர்தல், முறையான ஆவணங்கள் மூலம் நீக்கப்பட்டவர்கள் தங்களை மீண்டும் இணைத்துக்கொள்ளலாம் என அறிவித்தது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, வாக்காளர் பட்டியலில் இணைக ஆதார் அட்டையை கடைசி ஆவணமாக பயன்படுத்தலாம் என்றும் உத்தரவிட்டது.
பீகாரில் 65லட்சம் பேர் அதிரடியாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றனர். இது வாக்கு திருட்டு என தேர்தல் ஆணையம்மீது குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பான பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இசை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்.
ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரள எம்.பி. சசிதரூர், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை வரவேற்றுள்ளார். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தேவை என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நாடு முழுவதும் மேற்கொள்வது தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து விரைவில், அதற்கான பணிகள் மேற்கொள்வது அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தீவிர வாக்காளர் திருத்தம் குறித்து கூறிய தலைமை தேர்தல் அதிகாரி, ஞானேஷ்குமார் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் இதுவரை 12 முறை நடத்தப்பட்டுள்ளது, இது ஒன்றும் புதிதல்ல என்று கூறியிருப்பதுடன், வாக்காளர் பட்டியல், வாக்குரிமையில் ஏதேனும் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தால், தேர்தலுக்கு பின் 45 நாட்களுக்குள் அரசியல் கட்சிகள், உச்சநீதிமன்றத்தை நாடமுடியும் என்ற விதி உள்ளது, அதன்படி செயல்பட வேண்டும் என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறி மக்களை குழப்புவது, அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை மக்கள் அறிவர் என கூறியது குறிப்பிடத்தக்கது.