ரஷ்ய அதிபர் புட்டினுக்கு நெருக்கடி கொடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஐரோப்பிய ஒன்றியம் சீனா மற்றும் இந்தியா மீது 100% வரிவிதிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சீனா மற்றும் இந்தியா மீது வரிவிதிப்பு குறித்து டிரம்ப் ஐரோப்பிய ஒன்றிய தூதர் டேவிட் சல்லிவன் மற்றும் பிற அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விவாதித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை அமெரிக்க அதிகாரி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

‘சீனாவும் இந்தியாவும் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் வாங்குபவர்கள். 2022 முதல் ரஷ்யா தொடர்ந்து உக்ரைனைத் தாக்கி வருகிறது. ரஷ்ய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் சீனாவும் இந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கின்றன,’ என்று டிரம்ப் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், அமெரிக்காவும் இதேபோன்ற வரிவிதிப்புகளை விதிக்கத் தயாராக இருப்பதாக டிரம்ப் கூறியதாகவும் தெரிகிறது.

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியப் பொருட்களுக்கு 50% கூடுதல் வரிகளை டிரம்ப் விதித்துள்ளார், இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மோசமாக்கியுள்ளது.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் இந்திய பொருட்களுக்கான வரியை அதிகரிக்க நிர்பந்திப்பது இந்தியாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.