சென்னை: ”தமிழ்நாட்டில்  கடந்த  7 மாதங்களில் இணையவழியில் ரூ.1010 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக  சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சைபர் மோசடிகளில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும் அல்லது சைபர் க்ரைம் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தால், உடனடியாக இழக்கும் பணத்தை மீட்டெடுக்க முடியும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

இந்தியாவில் டிஜிட்டர் வளர்ச்சி உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் வளர்ந்து வரும் நிலையில்,  டிஜிட்டல் மோசடியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறருது.  நாடு முழுவதும் பொதுமக்கள் டிஜிட்டல் கைது, முதலீடு மோசடி, ஆன்லைன் விளம்பர மோசடி உள்ளிட்ட சைபர் மோசடியின் மூலம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் சைபர் மோசடியால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனால் சைபர் க்ரைம் போலீசார் பொதுமக்கள் மத்தியில் சைபர் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சைபர் மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்தும், பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் சைபர் மோசடியின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரை 1010 கோடி ரூபாய் பணத்தை பொதுமக்கள் இழந்துள்ளதாக தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மாநிலம் முழுவதும்  ”கடந்த ஏழு மாதங்களில் சைபர் மோசடி தொடர்பாக 88,479 புகார்கள் தமிழ்நாடு முழுவதும் பெறப்பட்டு உள்ளன. மேலும்,  இதுபோன்ற மோசடிகள் மூலம் பொதுமக்கள் இழந்த 314 கோடி ரூபாய் பணத்தை தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீசாரால் மீட்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் 62 கோடி ரூபாய் பணத்தை மீட்டு நீதிமன்ற உத்தரவின்படி புகார்தாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீடுகள் தொடர்பான சைபர் மோசடியில் சிக்கி 492 கோடி ரூபாயை பொதுமக்கள் இழந்துள்ளனர். அதே போல் டிஜிட்டல் கைது மோசடியில் 97 கோடி ரூபாயை பொதுமக்கள் இழந்துள்ளனர்.

மேலும், கடந்த 7 மாதங்களில் சைபர் மோசடியில் ஈடுபட்ட 18 குற்றவாளிகளை கண்டறிந்து, கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர். சைபர் மோசடியில் சிக்கி ஏமாற முயன்ற 153 நபர்கள் தடுத்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், சைபர் க்ரைம் மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது மக்களின் அறியாமை, பயம், பேராசையை வைத்து சைபர் குற்றவாளிகள் இத்தகைய மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சைபர் மோசடிகளில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும் அல்லது சைபர் க்ரைம் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தால், உடனடியாக அவர்கள் இழக்கும் பணத்தை மீட்டெடுக்க முடியும்.” என்று தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.