தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா பயன்படுத்திய ஜெட் விமானம் பாங்காக்கில் இன்று தரையிறங்கியதாக ‘பைலட் டிராக்கர்’ மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் மிகப்பெரிய பணக்காரரும் அரசியல்கட்சித் தலைவருமான தக்சின் ஷினவத்ரா அந்நாட்டின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்து வருகிறார்.

2001 முதல் 2006 வரை தாய்லாந்து பிரதமராக பதவி வகித்த அவர் 2007ம் ஆண்டு பியூ தாய் எனும் கட்சியைத் துவங்கினார்.

ஆட்சியை இழந்த தக்சின் ஷினவத்ரா மீது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டதாக வழக்குத் தொடரப்பட்டது.

இதையடுத்து 2009ம் ஆண்டு தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மொண்டெனேகுரோ-வுக்கு தப்பிச் சென்ற ஷினவத்ரா சுமார் 15 ஆண்டுகள் கழித்து கடந்த 2023ம் ஆண்டு தாய்லாந்து வந்தார்.

பியூ தாய் கட்சி ஆட்சியில் இருந்த நிலையில் அவர் மீதான வழக்கில் அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்த சிறை தண்டனை தாய்லாந்து மன்னரால் ஒரு வருடமாக குறைக்கப்பட்டது.

கால் நூற்றாண்டாக தாய்லாந்து அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்தி வரும் கோடீஸ்வரரான தக்சின் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே சிறைச்சாலையில் இருந்த நிலையில் மருத்துவ காரணங்களுக்காக மருத்துவமனையின் விஐபி பிரிவுக்கு மாற்றப்பட்டு தண்டனையை அனுபவித்து வந்தார்.

பின்னர், ஆறு மாதங்களில் சிறப்பு பரோலில் வெளியே வந்த தக்சின் ஷினவத்ரா தாய்லாந்து அரசியலில் மீண்டும் செல்வாக்கு செலுத்தினார்.

இந்த நிலையில் செப்டம்பர் 4 ஆம் தேதி புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க தாய்லாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவரது கட்சி தோல்வி அடைந்த நிலையில் அன்றைய தினமே தனி விமானம் மூலம் துபாய் பறந்தார்.

அவர் மீண்டும் நாட்டை விட்டு தப்பி ஓடியதாக செய்தி வெளியான நிலையில் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் தன் மீதான வழக்கு விசாரணைக்கு ஆஜராவேன் என்று அறிவித்திருந்தார்.

இதையடுத்து பாங்காக்கில் உள்ள தனியார் விமான நிலையம் ஒன்றில் அவர் சென்ற தனி ஜெட் விமானம் இன்று தரையிறங்கியதாகவும் விமான நிலையத்தில் இருந்து அவர் பயன்படுத்தும் கார் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

இருந்தபோதும், தக்சின் ஷினவத்ரா நாடு திரும்பியதாக உறுதி செய்யப்படவில்லை.

நாளை நடைபெற உள்ள வழக்கு விசாரணையில் அவரது பரோல் ரத்து செய்யப்பட்டு ஏற்கனவே மருத்துவமனையில் இருந்தபடி தண்டனையை அனுபவித்ததால் அது தண்டனையாக கருதப்படாமல் ஓராண்டு தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.