1970-ஆம் ஆண்டு மாணவன் படத்தில் இளைஞனாக முதன்முறையாக கமலஹாசன் திரையில் தோன்றி விசிலடிச்சான் குஞ்சுகளா என்று பாடிக் கொண்டிருந்தபோது படவாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார் இன்றைய மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி.
கமலை சிறுவனாக 1962-ல் மலையாளத் திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன்தான் மம்முட்டியையும் அறிமுகப்படுத்தினார். ஆனால் சிறிய வேடத்தில்..

அதே கமலஹாசன் ஏராளமான படங்களில் நடித்து வசூல் மன்னனாக உயர்ந்து 1987இல் நாயகன் என்ற பிரம்மாண்டமான படத்தின் மூலம் நடிப்பில் வேறு ஒரு தளத்திற்கு தாவிய போதுதான், நியூடெல்லி என்ற மலையாள படம் மூலம் மம்முட்டிக்கு மிகப் பெரிய பிரேக்கையே தந்தது..
இதற்கு முன்னரும் மம்முட்டி கதாநாயகனாக ஏராளமான படங்களில் நடித்திருந்தார்.. லோ பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் மலையாளத் திரைப்பட உலகில் வருடத்திற்கு 20 படங்கள் கூட மம்முட்டி நடித்து தள்ளினார்.
1971ல் திரையில் அறிமுகமான படத்தில் ஒரெயொரு சீன்.. அதன்பின் அவ்வளவு போராட்டம். ஏராளமான படங்களில் நடித்தாலும் பெரிய வளர்ச்சியில்லை..
1987..ஆக்சன் திரில்லரான நியூ டெல்லி படம் மம்முட்டிக்கு ஏற்படுத்தி தந்த திருப்பம் கொஞ்சநஞ்சமல்ல..
பிரபலங்கள் கொல்லப்பட்டதாக முன்கூட்டியே பத்திரிகை தலைப்புச் செய்தியாக அச்சடித்து விட்டு அதன் பிறகு காலையில் பத்திரிகை வெளியாகும் முன்பே திட்டமிட்டு கொலை செய்யும் செம த்ரில்லிங்கான பாத்திரம் மம்முட்டிக்கு..
நியூடெல்லி படம் ஓடிய ஓட்டம், சிபிஐ டைரிகுறிப்பு, ஐயர் தி கிரேட், ஒரு வடக்கத்தன் வீரகதா என மம்முட்டியின் திரைப் பயணத்தை ஜெட் வேகத்தில் ஏற்றிவிட்டது..

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மணிரத்னத்தின் தளபதி (1991) படத்தில், ரஜினிக்கு இணையாக செதுக்கப்பட்ட தேவா பாத்திரம், எங்கோ கொண்டுபோனது.
அடுத்தடுத்து தமிழில் சில படங்கள். அதிலும் பாலச்சந்தர் இயக்கிய அந்த அழகன் திரைப்படம். பானுப்பிரியா கீதா மதுபாலா என மூன்று கதாநாயகிகளுக்கு மத்தியில் பட்டையை கிளப்பும் நட்சத்திர ஹோட்டல் முதலாளி வேடம்.
ஒரு பக்கம் மிகப்பெரிய தொழிலதிபர் இன்னொரு பக்கம் மனைவியை இழந்து குழந்தைகளுடன் வாழும் நிலை.
இரண்டுக்கும் நடுவே வித்தியாசமான இயல்புத்தனம் மிக்க மனிதரை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருப்பார் மம்முட்டி.
இதேபோல மறுமலர்ச்சி படத்தில் அந்த ராசு படையாச்சியாகவே வாழ்ந்தவிதம் அற்புதமானது..
இங்கிலீஷ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட்ட அம்பேத்கர் படத்திலும் மிரள வைத்திருந்தார் நடிப்பில்.
மூன்று முறை தேசிய விருதுபெற்றவர், முன்னணி இளம் கதாநாயகன் துல்ஹருக்கு தந்தை, இன்றைக்கும் மலையாள உலகின் உலகின் சூப்பர் ஸ்டார்.. பல சிறப்பம்சங்கள்.
எல்லாவற்றையும்விட அருமையான மனிதாபிமானி..
சில மாதங்களாக நடிப்பதை நிறுத்திக் கொண்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிகிச்சை எடுத்து வருகிறார்.
விரைவில் பூரண ஆரோக்கியம் பெற்று மீண்டும் மம்முட்டி நடிப்பில் தொடர்வார் என பெரும் எதிர்பார்ப்பு. அவருக்கான படங்கள் காத்துக் கிடக்கின்றன.
மம்முட்டியின் 74வது பிறந்தநாள் இன்று