திருநெல்வேலி: நெல்லை ரயில் நிலைய வாசலில்  நள்ளிரவு வாலிபர்  ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை  செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக   இரண்டு பள்ளி மாணவர்களை காவல்துறை செய்துள்ளது. மேலும் சிலரை தேடி வருவதாக கூறப்படுகிறது.

நெல்லை டவுன் சுந்தரர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் என்கிற ஆனந்த் (19). இவர், அப்பகுதியில் தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது 4 நண்பர்களுடன் நேற்றிரவு நெல்லை ரயில் நிலையம் முன்பு அமைந்துள்ள டீக்கடைக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த மர்ம நபர்கள் சிலருக்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் வெங்கடேஷை ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பினர். இதை கண்ட பொதுமக்கள் அங்கிருந்துதெரித்து ஓடினர். இதுகுறித்து, சிலர் உடனடியாக அப்பகுதியில் இருந்த காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.  இதைத்தொடர்ந்து,  சம்பவ இடத்துக்கு விரைந்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் பிரசன்ன குமார் தலைமையிலான காவலர்கள் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலை சம்பவம் தொடர்பாக  அந்த பகுதியில் இருந்தவர்களிடம் விசாரித்த நிலையில்,  மேலும்,  வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.  அத்துடன் ரயில்நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள்,  , கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்  கொலையான வெங்கடேஷ் உடன் வந்த நண்பர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

முதல்கட்ட விசாரணையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்லை டவுன் பகுதியில் நடந்த கொலை தொடர்பாக வெங்கடேஷ் மீது வழக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு பழி வாங்குவதற்காக கொலை நடந்ததா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார், சந்திப்பு த.மு. சாலையில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் கும்பல் வெங்கடேசை வெட்டிக்கொலை செய்தது உறுதியானது. அதனை அடிப்படையாக கொண்டு விசாரித்ததில், நெல்லை டவுன் வயல் தெருவை சேர்ந்த இசக்கிராஜா (19) மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை நடத்தியிருப்பது தெரியவந்தது

இதையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் 2  பள்ளி மாணவர்களை  இன்று அதிகாலையில் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான இசக்கிராஜாவை தேடி வருகின்றனர். கைதான சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டவுன் பகுதியில் வெங்கடேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கொலையாளிகள் தரப்பினரும் மோட்டார் சைக்கிளில் வரவே, 2 தரப்பினரின் மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்படவே கைகலப்பு வரை சென்றதாகவும், அந்த பகுதி மக்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இசக்கிராஜா தரப்பினர் சமாதானம் அடையாமல், திட்டமிட்டு வெங்கடேசை கொலை செய்தது தெரியவந்தது.

கைதான 2  மாணவர்களும் டவுனில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். தலைமறைவான இசக்கிராஜா பள்ளி படிப்பை முடித்துவிட்டு அரசு போட்டித்தேர்வுக் காக தனியார் அகாடமியில் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.