பூவை செங்குட்டுவன் காலமானார்.

எம்ஜிஆரின் கொள்கை பாடல்கள் டாப் டென் என்று எடுத்துக் கொண்டால் அதில் வரும் ஒரு பாடல்,

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊரறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை.

புதிய பூமி (1968) படத்தில் இடம்பெற்ற இந்த பாடல், இன்றும் எம்ஜிஆரின் புகழை பாடிக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடலை எழுதியது கண்ணதாசனோ வாலியோ இல்லை, கவிஞர் பூவை செங்குட்டுவன் அவர்கள்.

திராவிட இயக்க சிந்தனைகள் கொண்ட பூவை செங்குட்டுவன் இந்தப் பாடலை எழுதுவதற்கு முன்பே, “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் ”

என்ற பாடல் மூலம் புகழ் ஏணியில் ஏற ஆரம்பித்தார். இத்தனைக்கும் இந்தப் பாடல் கந்தன் கருணை படத்துக்காக எழுதப்பட்டது அல்ல.

நாடகத்திற்காக எழுதி குன்னக்குடி வைத்தியநாதனால் இசையமைக்கப்பட்டவை. நாடகத்தைப் பார்த்த கவிஞர் கண்ணதாசன் அதை அப்படியே கந்தன் கருணை படத்தில் பயன்படுத்துங்கள் என்று சொல்ல இயக்குனர் ஏபி நாகராஜன் அப்படியே செய்தார்.

இந்தித்துறை உலகில் 1940-களில் நடிக்க வாய்ப்பு தேடிய தேவ் ஆனந்த்தும், இயக்க வாய்ப்பு தேடிய குரு தத்துக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் இருந்தது.

யாருக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தாலும் அதனை வைத்து இன்னொருவர் மறக்காமல் வாய்ப்பு தந்து தூக்கி விட வேண்டும் என்பதுதான் அது.

இதே மாதிரியான ஒரு ஒப்பந்தத்தோடு திரைத் துறையில் போராடியவர்கள் தான் கவிஞர் பூவை செங்குட்டுவனும் இசை மேதை குன்னக்குடி வைத்தியநாதனும்.

சினிமாவில், பக்தி பாடல் என்றால் பூவை செங்குட்டுவனை எழுத வைக்கலாமே என்கிற அளவுக்கு இசையமைப்பாளர்கள் மத்தியில் என்னும் மேலோங்கிய காலகட்டம் அது.

இதற்கு விதை போட்டது எம் எஸ் விஸ்வநாதன். 1966 இல் வெளியான கௌரி கல்யாணம் படத்தில் “திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும், வரும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்” என்ற பாடலை எழுதினார் பூவை செங்குட்டுவன்.

பக்தி மற்றும் புராண படங்களை எடுப்பதில் வல்லவரான இயக்குனர் ஏ பி நாகராஜன் மட்டும் தொடர்ந்து பூவை செங்கோட்டையனுக்கு வாய்ப்பு அளித்தார். அந்த வகையில் இன்றும் காதில் கேட்டால் சலிக்கவே சலிக்காத ஒரு பாடல், தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என செங்குட்டுவன் எழுதிய காலத்தால் அழிக்க முடியாத பாடல்.

இப்படி ஏராளமான திரைப்பட பாடல்களை எழுதிய பூவை செங்குட்டுவன், நேற்று 90 வயதில் சென்னையில் காலமாகிவிட்டார்