பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த மாநில அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி வரும் உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வலியுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் இவிஎம் எனப்படும் எலக்ட்ரானிக் வோட்டிங் முறையில், தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில்,  தேர்தல்களில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில், வாக்குச்சீட்டுகளை மீண்டும் கொண்டுவர பரிந்துரைத்துள்ளதாக கர்நாடக சட்ட அமைச்சர் எச்.கே.பாட்டீல் கூறி உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெறும்  “உள்ளாட்சித் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்த கர்நாடக அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது. மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கவும், தேவைப்பட்டால் திருத்தவும் அங்கீகாரம் அளித்துள்ளோம். ஏனெனில் மக்களின் நம்பகத்தன்மையை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரித்துவிட்டது என்று குற்றம் சாட்டி உள்ளார்.

கர்நாடகாவில் 2024 மக்களவைத் தேர்தலில் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் வாக்கு திருட்டு நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இக்குற்றச்சாட்டு அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் வாக்குச்சீட்டு நடைமுறைகளை கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தது.  இந்த நிலையில்,  கர்நாடகா முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தும் மாநில தேர்தல் ஆணையம், கர்நாடக அமைச்சரவையின் இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.