சென்னை: சென்னை பகுதிகளில் உலாவரும் தெரு நாய்களுக்கு சுமார் 10ஆயிரம் நாய்களக்கு   ஏற்கனவே சோதனை  முறையில மைக்ரோசிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், வீடுகளில் வளர்க்கும் வளர்ப்பு நாய்களுக்கும் மைக்ரோசிப் பொருத்தும்  திட்டத்தை சென்னை மாநகராட்சி  அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

தெருநாய் மற்றும் வளர்ப்பு நாய்கள் பலர் நாயக்கடிக்கு ஆளாகி உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து உச்சநீதிமன்றம் நாய் வளர்ப்பு குறித்து கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும், நாய்களுக்கு தெருவில் உணவு அளிக்ககூடாது என்றும், அதற்கு உரிய இடங்களில் மட்டுமே உணவு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுறுத்தல்களை அறிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி தெருநாய்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என கடந்த ஜுன் மாதமே நாய் கட்டுப்பாடு குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அப்போது,  தெருநாய்களுக்கு மைக்ரோப் பொருத்தும் பணி  நடைபெற இருப்பதாகவும் கூறியது. ஆனால், அந்த திட்டம் மெதுவாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  தற்போது வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட உள்ளதாக அறிவித்து உள்ளது.

வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம்  பொருத்தப்பட வேண்டும் என்றும், தவறினால் ரூ.3000 வரை அபராதம் வசூலிக்கவும்  சென்னை  மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

 சென்னையில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதில் பிட் புல், ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட நாய் இனங்களால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, நாய் வளர்ப்பவர்கள் சாலையில் அழைத்துச் செல்லும்போது நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் அணிவிக்க வேண்டும், ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும், கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும், வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளர்களே பொறுப்பு ஆகிய கட்டுப்பாடுகளை விதித்தது.

மாநகராட்சியின் இந்த உத்தரவுகளை பெரும்பாலான நாய் வளர்ப்பவர்கள் பின்பற்றவில்லை. இதேபோல, பராமரிக்க முடியவில்லை என்றால் வளர்ப்பு நாய்களை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் விட்டு செல்லும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில் வளர்ப்பு நாய்களின் உடலில் ‘மைக்ரோ சிப்’ பொருத்த மாநகராட்சி முடிவு செய்தது.

இதுகுறித்து கடந்த ஜனவரி மாதம் நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சிப் கொள்முதல் மற்றும் அதற்கான செயலி உருவாக்கத்திற்கு மாநகராட்சி டெண்டர் கோரியது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்துவது கட்டாயமாகிறது.

இதுகுறித்து கூறிய  மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரி, சென்னையில் உள்ள 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை 11 ஆயிரம் தெரு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்தி அதை கண்காணித்து வருகிறோம். இதேபோல, சென்னையில் 12,500 பேர் தங்களின் வளர்ப்பு பிராணிகளுக்கு உரிமம் பெற்றுள்ளனர். மீதம் உள்ள நபர்கள் உரிமம் பெற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் முதல் சென்னையில் வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் தங்களின் நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்துவது கட்டாயம். இதற்காக 2 லட்சம் ‘மைக்ரோ சிப்’கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.

தனியார் மற்றும் அரசு கால்நடை ஆஸ்பத்திரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வழங்கப்பட உள்ளது. வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வரும் போது ‘மைக்ரோ சிப்’ பொருத்தவில்லை என்றால் கட்டாயம் பொருத்திக்கொள்ள அறிவுறுத்தப்படும். அவ்வாறு பொறுத்தாத நாயின் உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். ‘மைக்ரோ சிப்’ பொருத்தப்படும் நாய்கள் அதற்கான செயலி மூலம் கண்காணிக்கப்படும் என்றுதெரிவித்துள்ளார்.

சென்னையில் ஏற்கனவே உள்ள நாய் காப்பகங்களுடன்  புதிதாக 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைத்து வருகிறது.  மேலும்,   தெரு நாய்களுக்கு  வீதிகள் தோறும் சென்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெறிநாய்க்கடி நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில், திரு.வி.க.நகர் மண்டலம்-புளியந்தோப்பு, தேனாம்பேட்டை மண்டலம்-லாயிட்ஸ் காலனி, கோடம்பாக்கம் மண்டலம்-கண்ணம்மாபேட்டை, சோழிங்கநல்லூர் மண்டலம்-சோழிங்கநல்லூர், ஆலந்தூர் மண்டலம்-மீனம்பாக்கம் ஆகிய 5 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் புளியந்தோப்பு, திரு.வி.க.நகர், நுங்கம்பாக்கம், லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை மற்றும் மீனம்பாக்கம் ஆகிய 6 இடங்களில் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி மற்றும் கண்ணம்மாபேட்டை ஆகிய இனக்கட்டுப்பாட்டு மையங்களில் நாளொன்றுக்கு தலா 30 தெருநாய்களுக்கும், மீனம்பாக்கம் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் நாளொன்றுக்கு 15 தெருநாய்களுக்கும், சோழிங்கநல்லூர் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் நாளொன்றுக்கு 10 தெருநாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

கூடுதலாக பெருநகர சென்னை மாநகராட்சியின் 1, 2, 3, 4, 5, 7, 8, 11, 12 மற்றும் 14 ஆகிய 10 மண்டலங்களில் நாளொன்றுக்கு தலா 30 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மற்றும் ரேபிஸ் தடுப்பூசிகள் செலுத்தும் வகையில் 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

தெருநாய்கள் பிடிக்கும் பணிகளுக்காக 16 நாய்கள் பிடிக்கும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் நாய் பிடிக்கும் வலைகளுடன் சராசரியாக 5 நாய் பிடிக்கும் பணியாளர்கள் என 78 பணியாளர்கள், கருத்தடை அறுவை சிகிச்சை பணிகளை மேற்கொள்ள 23 கால்நடை உதவி மருத்துவர்கள், கருத்தடை அறுவை சிகிச்சையின் தரத்தினை உறுதி செய்வதற்காக 4 கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணியில் 1,80,157 தெருநாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 66,285 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளும், 66,285 தெருநாய்கள் மற்றும் 41,917 செல்லப்பிராணிகள் என மொத்தம் 1,08,202 நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

தெருநாய்களைப் பிடித்தல், கருத்தடை செய்தல், வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் மீண்டும் விடுவித்தல் ஆகியவற்றை முறையாக கண்காணிப்பதற்காக ஒவ்வொரு நாய்க்கும் மைக்ரோசிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி முன்னோட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 1.80 லட்சம் தெருநாய்களுக்கும் ரூபாய் 3 கோடி செலவில் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்துதல் பணி வருகின்ற ஜுன் மாதம் முதல் தீவிரமாக மேற்கொள்ளப்படவுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.