“ஒரு நாடு, ஒரு வரி” என்பதை “ஒரு நாடு, 9 வரிகள்” என்று மாற்றியது பாஜக அரசு என்று சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.
56வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் 12% மற்றும் 28% வரி அடுக்குகளை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் இரண்டாம் தலைமுறை ஜி.எஸ்.டி. என்று மத்திய அரசு கூறிவருகிறது.

இந்த நிலையில் ஜிஎஸ்டி-யில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி வாதிட்டு வந்த நிலையில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களில் தாமதம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கார்கே, “கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக, இந்திய தேசிய காங்கிரஸ் ஜிஎஸ்டியை எளிமைப்படுத்தக் கோரி வருகிறது.
மோடி அரசாங்கம் “ஒரு நாடு, ஒரு வரி” என்பதை “ஒரு நாடு, 9 வரிகள்” ஆக மாற்றியது. இதில் 0%, 5%, 12%, 18%, 28% வரி அடுக்குகள் மற்றும் 0.25%, 1.5%, 3% மற்றும் 6% சிறப்பு விகிதங்கள் அடங்கும்,”
காங்கிரஸ் கட்சி தனது 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் அறிக்கையில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களைக் கோரியதை நினைவு கூர்ந்தார்.
மேலும், 2011 ஆம் ஆண்டு UPA-2 அரசாங்கத்தின் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியால் கொண்டுவரப்பட்ட GST மசோதாவை பாஜக குறிப்பாக அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி இதை எதிர்த்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
“இன்று, அதே பாஜக அரசு, பொது மக்களிடமிருந்து வரி வசூலிப்பது ஒரு பெரிய சாதனை போல, சாதனை ஜிஎஸ்டி வசூலைக் கொண்டாடுகிறது. நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, விவசாயிகள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த மோடி அரசு விவசாயத் துறையில் குறைந்தது 36 பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதித்துள்ளது,” என்று கார்கே குறிப்பிட்டுள்ளார்.
பால், தயிர், மாவு, தானியங்கள் மற்றும் குழந்தைகளின் பென்சில்கள் மற்றும் புத்தகங்கள், ஆக்ஸிஜன், காப்பீடு மற்றும் மருத்துவமனை செலவுகள் போன்ற அன்றாடத் தேவைகளுக்கு அரசாங்கம் வரி விதித்ததால், தனது கட்சி ஜிஎஸ்டியை “கப்பர் சிங் வரி” என்று பெயர் மாற்றியதாக காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டார்.
நாட்டின் ஜிஎஸ்டி வசூலில் மூன்றில் இரண்டு பங்கு நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்து வருவதாகவும், ஜிஎஸ்டியில் மூன்று சதவீதம் மட்டுமே நாட்டின் பில்லியனர்களால் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
“கடந்த 5 ஆண்டுகளில், வருமான வரி வசூலில் 240% அதிகரிப்பு மற்றும் GST வசூலில் 177% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 8 ஆண்டுகள் தாமதமாக இருந்தாலும், இறுதியாக மோடி அரசு தனது கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்துள்ளது.
மேலும் அவர்கள் விழித்தெழுந்தவுடன் விகித பகுத்தறிவு பற்றிப் பேசியுள்ளனர் என்பது ஒரு நல்ல விஷயம்.
விகிதங்களைக் குறைப்பது அவர்களின் வருவாயில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி என்பதால், 2024-25 ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டு, அனைத்து மாநிலங்களுக்கும் 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
GST இன் சிக்கலான இணக்கங்களும் நீக்கப்பட வேண்டும்; அப்போதுதான் MSMEகள் மற்றும் சிறு தொழில்கள் உண்மையிலேயே பயனடைவார்கள்,” என்று கார்கே அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.