சென்னை: சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் அதனை தாக்கும் திறன் மாநகராட்சிக்கு உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும், சென்னையில் 3081 மழை நீர் வடிகால்வாய்கள் உள்ளன அதன்மூலம் மழைநீர் வெளியேறிவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்கு கடந்த 4 ஆண்டுகளில் செலவு செய்த தொகை 4000 கோடி ரூபாய்க்கு மேல் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜுலை மாதம் செய்தியாளர்களிடம் பேசிய அப்போதைய மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் 90சதவிகித மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்து விட்டன என்றார். ஆனால், அவர் சொல்லி ஓராண்டுகளை கடந்த நிலையில், இன்றளவும் பல பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் அதனை தாங்கும் திறன் மாநகராட்சிக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார். சென்னையில் 3081 மழை நீர் வடிகால்வாய்கள் உள்ளன; தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது என்று கூறிய அமைச்சர், சென்னையில் கடந்த 4 ஆண்டுகளில் 1000 கி.மீ. மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளன என்று தெரிவித்ததுடன், கிண்டி ரேஸ் கோர்ஸில் உள்ள 4 குளங்களின் பரப்பளவு 49,072 ச.மீ. அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. 4 குளங்களின் மூலம் 8.66 மில்லியன் கன லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அமைச்சர் மா.சு.வின் நம்பிக்கை வரும் வடகிழக்கு பருவமழை காலத்தின்போது தெரிய வரும். கடந்த வாரம் (ஆகஸ்டு 3வது வாரம்) சென்னையில் பெய்த மழையில், தி.நகர் துரைசாமி பாலத்தில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. சுமார் 3 மாதம் வரை நீடிக்கும் இந்த காலம் 2026 ஜனவரியில் முடிவுக்கு வரும். இந்த காலக்கட்டத்தில் பெய்யும் மழையின்போது, சென்னையில் தண்ணீர் தேங்குமா என்ற கள நிலவரம் தெரிய வரும். அப்போது அமைச்சரின் கூற்று உண்மையாகும் என நம்புவோம்.