சிங்கப்பூரில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு வேலை செய்து வரும் பிடோ எர்லிண்டா ஒகாம்போ என்ற பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் S$13,000 (தோராயமாக ரூ.8.8 லட்சம்) அபராதம் விதித்துள்ளது.

53 வயதான ஒகாம்போ 1994ம் ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்ட நான்கு வெவ்வேறு நிறுவனங்கள் மூலம் சிங்கப்பூரில் சட்டப்பூர்வமாக பணிபுரிந்து வந்தார்.

பிடோ எர்லிண்டா ஒகாம்போ – சோ ஓய் பெக்

ஒளிவுமறைவின்றி ஓரிடத்தில் வேலை செய்து வந்த ஒகாம்போ வார விடுமுறை நாட்களில் தனது எஜமானருக்கு தெரியாமல் வேறு இரண்டு சிங்கப்பூரர் நபர்களின் வீடுகளில் வேலை செய்து வந்துள்ளார்.

சோ ஓய் பெக் மற்றும் புலக் பிரசாத் என்ற அந்த நபர்களின் வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஒளிவுமறைவாக வேலை செய்து வந்த நிலையில் ஒருவரிடம் இருந்து மாதம் S$375 மற்றும் மற்றொரு முதலாளியிடமிருந்து S$450 சம்பளமாக பெற்றுவந்துள்ளார்.

ஓரிடத்தில் சட்டபூர்வமாக வேலை செய்துகொண்டு ஓய்வு நாட்களில் மற்ற இடங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாக இப்படி ஒளிவுமறைவாக வேலை செய்தது தெரியவந்ததை அடுத்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

சிங்கப்பூரில், வெளிநாட்டு வீட்டு வேலை செய்பவர்கள் ஓய்வு நாட்களில் கூட கூடுதல் வேலைகளில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் S$20,000 வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

அதேபோல், அங்கீகரிக்கப்படாத வேலைகளுக்கு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு S$5,000 முதல் S$30,000 வரை அபராதம், ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஒகாம்போ மீது வெளிநாட்டு மனிதவளச் சட்டத்தை மீறியதாக வந்த புகாரை மனிதவள அமைச்சகம் (MOM) விசாரித்த நிலையில் தனது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

விசாரணையின் முடிவில் ஒகாம்போ-வுக்கு S$13,000 (சுமார் ரூ. 8.9 லட்சம்) அபராதமும் அவரை சட்டவிரோதமாக பணியமர்த்திய சோ ஓய் பெக்-க்கு S$7,000 (சுமார் ரூ. 4.78 லட்சம்) அபராதமாக விதிக்கப்பட்டது.

சோ ஓய் பெக் அறிமுகப்படுத்தியதின் பெயரில் புலக் பிரசாத் என்பவரது வீட்டில் வேலை செய்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதை அடுத்து அதற்கான அபராதம் பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.