சியோலில் உள்ள ஒரு ரயில் நிலையம் அருகே சிகரெட் துண்டை சாலையில் போட்ட நபரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஐந்து ஆண்டுகளாக கிரிப்டோகரன்சி மோசடியில் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்று தெரியவந்தது.
சிகரெட் பிடித்துவிட்டு சாலையில் வீசிய 60 வயது நபரை பிடித்து அதற்கான பிரிவில் கைது செய்ய முயன்ற போலீசாரிடம் “இந்த ஒரு முறை மட்டும்” தன்னை விடுவிக்குமாறு கெஞ்சியுள்ளார்.

இதையடுத்து அவரது அடையாள அட்டையைக் கேட்டபோது கொடுக்க மறுத்த அந்த நபர் அதற்கு பதிலாக தன்னை விடுவிப்பதற்கு பணம் வழங்க முன்வந்தார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் கிரிப்டோகரன்சி மோசடியில் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்பது தெரியவந்தது.

1300 பேரிடம் இருந்து சுமார் 113 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள இந்த நபர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் கடந்த ஆண்டு மட்டும் 240 மில்லியன் டாலர் (2100 கோடி ரூபாய்) அளவுக்கு கிரிப்டோகரன்சி மோசடி நடைபெற்றதாகவும் இதுதொடர்பாக 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.