சென்னை:  முதலமைச்சர் ஸ்டாலின் 50வது பொன்விழா  திருமண நாள் இன்று கொண்டாடுகிறார்.  இதையொட்டி,  முதலமைச்சர் ஸ்டாலின், மனைவி துர்காவுடன் சென்று மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்களான அண்ணா,  கலைஞர்  கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருக்கு துணைமுதல்வர் உதயநிதியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், முதலமைச்சர் ஸ்டாலினின்   “50 வருடங்களுக்கு முந்தைய திருமண போஸ்டர்” வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று  (ஆகஸ்ட் 20) தனது 50வது திருமண நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவருக்கு  குடும்பத்தினர், கட்சியினர், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தனது மனைவியான துர்காவுடன் சென்று  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செய்தார்.  இதையடுத்து கோபாலபுரம் வீட்டுக்கு சென்ற  முதல்வர் அங்கு தனது தாயார் தயாளு அம்மாவிடன் மனைவியுடன் ஆசி பெற்றார்.

இதற்கிடையில், ஸ்டாலினின்   50வது திருமண நாளை முன்னிட்டு, 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட திருமண அழைப்பிதழ் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தப் போஸ்டரில், திருமண விழா அப்போதைய கல்வி அமைச்சர் நாவலர் தலைமையில், திமுக பொருளாளர் அன்பழகன் முன்னிலையில் நடைபெறும் என்றும், அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது உள்ளிட்ட அறிஞர்கள் வாழ்த்துரை வழங்குவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,  துர்க்காவதியை 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில், இன்று 50வது வருட திருமண நாள் கொண்டாடி வருகிறார்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் மகனும், துணைமுதல்வருமான உதயநிதி, அம்மா – அப்பாவுக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,   அம்மாவும் – அப்பாவும் இல்வாழ்வில் இன்று பொன்விழா காண்கிறார்கள். மணமான சில மாதங்களிலேயே மிசா சிறைவாசம், இடைவெளியில்லா சுற்றுப்பயணங்கள் கடும் அரசியல் சூழல்கள்; தொடர் மக்கள் பணி என எல்லாவற்றிலும் அப்பாவுக்கு அம்மா பெருந்துணை அம்மா – அப்பா இன்று போல் என்றும் மகிழ்ந்திருக்க என் அன்பு வாழ்த்துகள்  என வாழ்த்தி உள்ளார்.

பொன்விழா திருமண நாளை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின் அவரது மனைவி துர்காவுக்கு  அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல தரப்பினரும் நேரில் சென்று திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.