சென்னை: தீபாவளி பண்டிகைக்காக வெளியூர்களுக்கு செல்ல ரயில்களில் இன்று காலை முன்பதிவு தொடங்கிய நிலையில்,  முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே அனைத்து இடங்களிலும் நிரம்பியது. இதனால், ஏராளமானோர்  டிக்கெட்டை கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. . இதனையொட்டி ரயில்களில் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை 60 நாட்களுக்கு முன்பே  முன் பதிவு செய்து கொள்ளலாம்.  அதன்படி ரயில்களுக்கு முன்பதிவு தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் அக்.17ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு செல்வோருக்காக ரயில் முன்பதிவு காலை தொடங்கியது.  பல ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய இணையதளத்தை நாடியதால், இணையதளம் தள்ளாடியது. மேலும், ஏராளமானோர் ரயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்களிலும் முன்பதிவு செய்ய காத்திருந்தனர். ஆனால், முன்பதிவு தளம் திறந்த அடுத்த 10 நிமிடங்களுக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.

குறிப்பாக  தென்மாவட்டங்களுக்கு செல்லும்,  நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, சேரன், பொதிகை  என பல எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு முடிந்தது. முன்பதிவு முடிந்ததால் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் காத்திருப்பு பட்டியலுக்கு சென்றுள்ளன.