சென்னை; வடபழனியில் புதிதாக அமைய உள்ள ஆகாய நடைமேம்பாலப் பணிக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி,  வடபழனி மெட்ரோவின் கட்டம் I & II ஐ இணைக்கும் ஸ்கைவாக் அமைக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வடபழனி மெட்ரோவின் கட்டம் I & II நிலையங்களை இணைக்கும் ஸ்கைவாக் ஒன்றை 120 நாட்களில் கட்ட CMRL ₹8.12 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, இது தடையற்ற, டிக்கெட் இல்லாத போக்குவரத்து, வேகமான பயணம் மற்றும் பாதுகாப்பான, வானிலையால் பாதுகாக்கப்பட்ட இயக்கத்தை செயல்படுத்துகிறது.

சென்னை வடபழனியில் புதிதாக அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பழைய மெட்ரோ ரயில் நிலையத்தை அமைக்கும் வகையில், ரூ.8.12 கோடி செலவில் புதிய ஆகாய நடை மேம்பாலம் அமைய உள்ளது. 130 மீட்டர் நீளத்திலும் 6 -10 மீட்டர் அகலத்திலும் கண்ணாடி மற்றும் இரும்பினால் இந்த நடை மேம்பாலம் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆகாய நடைமேம்பாலப் பணிக்கான ஒப்பந்தத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி உள்ளது. மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்வில் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

120 நாட்களில் இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட உள்ளது. மேம்பாலம் அமைந்த பிறகு, இரு ரயில் நிலையங்களுக்கும் பயணிகள் மற்றும் பொது மக்கள் எளிதில் செல்லலாம். சாலையை கடந்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.