டெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது ரூ. 3000க்கான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் நடைமுறை. இதை மத்தியஅரசு உறுதி செய்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத்துறையின் 3000 ரூபாய்க்கான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் நடைமுறை ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அமுலாகிறது. இந்த திட்டத்தின்படி, தனியார் வாகனங்களுக்கு (பர்சனல் டிரான்ஸ்போர்ட் – சொந்த வாகனங்கள்) 200 கட்டணமில்லா பயணங்களும் வழங்கப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக ‘பாஸ்டேக்’ முறை நடைமுறையில் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாஸ்டேக் திட்டம் முதன்முதலில் அறிமுகமானது. அதன் பிறகு, 2021ஆம் ஆண்டில், நாடு முழுவதும் இது கட்டாயமாக்கப்பட்டது. இதனால் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் கணிசமாகக் குறைந்ததுடன், சில்லறை பிரச்சினை, ஊழியர்களுடன் ஏற்படும் தகராறு போன்ற சிக்கல்கள் குறைந்தன. தற்போது, பாஸ்டேக் நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு தவிர்க்க முடியாத கட்டமைப்பாக மாறியுள்ளது.
இதற்கிடையே ஓராண்டுக்கு ரூ.3 ஆயிரம் சலுகையில் பாஸ் வழங்கும் முறையை மத்திய அரசு அறிவித்தது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்த இந்த புதிய திட்டம், நீண்ட தூர பயணிகளுக்கு நேரத்தையும் செலவையும் குறைக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டு பாஸ் திட்டம் சுதந்திர தினமான நாளை முதல் அமலுக்கு வருகிறது.
ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ் திட்டத்தின்படி இந்த பாஸ் பெற ₹ 3,000 செலுத்த வேண்டும். இதன் ஆயுட் கலம் ஒரு வருடம் அல்லது 200 கட்டணமில்லா பயணங்கள். எது முதலில் வருகிறதோ அதுவரை செல்லுபடியாகும், மேலும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வேயில் நியமிக்கப்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு பொருந்தும்.
மாநில நெடுஞ்சாலைகள், மாநிலங்கள் நிர்வகிக்கும் எக்ஸ்பிரஸ்வே மற்றும் உள்ளூர் அமைப்புகளால் பராமரிக்கப்படும் சாலைகளில் இவை பொருந்தாது வழக்கமான ஃபாஸ்டேக் கட்டணங்களே பொருந்தும்.
இது கார்கள், ஜீப்கள் மற்றும் வேன்கள் போன்ற தனியார் வணிக நோக்கமற்ற ( Non Commercial) வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும், ஆனால், டாக்ஸி, டூரிஸ்ட் வாகனங்களுக்கு பொருந்தாது. 200 பயணங்கள் அல்லது ஒரு வருட வரம்பை அடைந்தவுடன், ஃபாஸ்டேக் வழக்கமான பயன்பாட்டிற்கு திரும்பும். பயனர்கள் அதே செயல்முறை மூலம் வருடாந்திர பாஸ் மீண்டும் புதுப்பிக்க முடியும்.
இந்த ஆண்டு சந்தா, சாதாரண பாஸ்டேக் பரிவர்த்தனைக்குச் செலவாகும் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் குறைந்த விலையில் கிடைப்பதால், நீண்ட காலத்தில் செலவு குறைக்கும் ஒரு தீர்வாகக் கருதப்படுகிறது. மேலும், சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசலைக் குறைப்பதற்கும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்கும் இது உதவும் என்று போக்குவரத்து துறை எதிர்பார்க்கிறது.
மத்திய அரசு, இந்த ஆண்டு சந்தா திட்டம் அறிமுகமாகிய பின், சுங்கச் சாவடிகளில் பயணிகள் நேரமும் எரிபொருளும் மிச்சப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும். அதேசமயம், மக்கள் இந்த வசதியை முழுமையாகப் பயன்படுத்தி, கடைசி நேரத்தில் பணம் செலுத்தும் சிரமங்களையும் நீண்ட வரிசைகளையும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு பாஸ் பெறுவதற்கு முதலில் வாகனமும், அதனுடன் இணைக்கப்பட்ட பாஸ்டேக் தகுதியும் சரிபார்க்கப்படும். பின்னர் ரூ.3 ஆயிரம் கட்டணத்தை ‘ராஜ்மார்க்யாத்ரா’ செல்போன் செயலி அல்லது தேசிய நெடுஞ்சாலை இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். 2 மணி நேரத்திற்குள் ‘பாஸ்’ செயல்படுத்தப்படும். இது தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய விரைவுச்சாலையில் மட்டுமே செல்லுபடியாகும்.
மாநில நெடுஞ்சாலை, மாநில-உள்ளாட்சி நிர்வாக கட்டண மையங்கள், ‘பார்க்கிங்’ போன்ற இடங்களில் வழக்கமான முறையில் செயல்படும். அதற்கு கட்டணங்கள் வழக்கம்போல் வசூலிக்கபபடும். இந்த ‘பாஸ்’ எந்த வாகன எண்ணுக்கு பெறப்படுகிறதோ, அந்த வாகனத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு வாகனத்திற்கு பயன்படுத்தினால், அது செயலிழக்கப்படும். மேலும் இந்த ஆண்டு ‘பாஸ்’ ஒட்டிய வாகனங்கள், ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடிகளை கடக்கும்போது, செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்து விடும். இந்த ஆண்டு பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என்பது அல்ல. வழக்கம்போல் பாஸ்டேக் கட்டணம் செலுத்தி சுங்கச்சாவடிகளை கடந்து செல்லாம். தற்போது பாஸ்டேக்கில் உள்ள தொகையை, ரூ.3 ஆயிரம் பாஸ் பெறுவதற்கு பயன்படுத்த முடியாது.