அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புட்டினை நாளை சந்திக்க உள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா இடையே நீடித்து வரும் போரை நிறுத்த கடந்த மூன்றரை ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகள் எந்த ஒரு பலனையும் அளிக்கவில்லை.
அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் இந்த போரை நிறுத்த அதிகாரிகள் மட்டத்தில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினார்.
தவிர, ரஷ்யா உடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது வரி விதிப்பை அதிகரித்தார்.
இருந்தபோதும் டிரம்பின் எந்தவொரு நடவடிக்கையும் அவருக்கு பலனளிக்கவில்லை.
இதையடுத்து புடினுடன் நேரடி பேச்சுவார்த்தையில் இறங்க டிரம்ப் முன்வந்துள்ளார்.
டிரம்பின் இந்த நடவடிக்கை உலக அரங்கில் அமெரிக்காவின் மதிப்பை மேலும் குறைத்துவிடும் என்று எதிர்க்கட்சியினர் குறை கூறிவருகின்றனர்.
இருப்பினும் ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பதில் தீவிரமாக உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் அலாஸ்காவில் உள்ள எல்மெண்டோர்ப் ரிச்சர்ட்சன் ராணுவ தளத்தில் நாளை சந்தித்து பேசுகிறார்.
அலாஸ்காவில் நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்கப்போவதில்லை என்றும் உக்ரைனின் பல பகுதிகள் ரஷ்யா உடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பணி பிரதேசமான அலாஸ்காவில் நடைபெற உள்ள டிரம்ப் – புடின் சந்திப்பு இதமான சூழலை ஏற்படுத்துமா என்று உலக நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன.