சென்னை: சுதந்திர தினத்தையொட்டி நாளை நடைபெறும் நிகழ்ச்சியின்போது, தமிழ்நாட்டில் சிறந்த நகராட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்கிறார். அதன்படி,  2 மாநகராட்சிகள், 3 நகராட்சிகளுக்கு நாளை விருது வழங்குகிறார் .

சுதந்திர தினத்தையொட்டி, நாளை கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றும் முதல்வர் ஸ்டாலின், அதைத்தொடர்ந்து  கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அப்போது,    சிறப்பாகச் செயல்படும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவின்போது விருதுகள், காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குவது வழக்கம்.

ஒவ்வொரு ஆண்டும், சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டு அவற்றுக்கு பாராட்டுப் பத்திரங்களும், ரொக்கப் பரிசுக்கான காசோலைகளும் அளிக்கப்படுகின்றன.

அதன்படி,  நடப்பாண்டில், சிறந்த மாநகராட்சிகளாக ஆவடி, நாமக்கல் மாநகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து,   சுதந்திர தின விழாவில் பங்கேற்று விருதுகளைப் பெற்றுக்கொள்ள, ஆவடி மாநகராட்சி மேயா் ஜி.உதயகுமாா், நாமக்கல் மாநகராட்சி மேயா் டி.கலாநிதி ஆகியோருக்கு தமிழக அரசின் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த நகராட்சிகளுக்கான விருதுகளுக்கு ராஜபாளையம், ராமேசுவரம், பெரம்பலூா் நகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. விருதுகளைப் பெற்றுக்கொள்ள நகா்மன்றத் தலைவா்கள் பவித்ரா ஷியாம் (ராஜபாளையம்), நாசா்கான் (ராமேசுவரம்), அம்பிகா ராஜேந்திரன் (பெரம்பலூா்) ஆகியோருக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ள மாநகராட்சிகளுக்கு முறையே ரூ.50 லட்சம், ரூ.30 லட்சம் ரொக்கப் பரிசுக்கான காசோலைகள் வழங்கப்பட உள்ளன. முதல் 3 இடங்களைப் பிடித்த நகராட்சிகளுக்கு முறையே ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம் மற்றும் ரூ.10 லட்சத்துக்கான காசோலைகள் அளிக்கப்பட இருக்கின்றன.

இதற்கான உத்தரவுகளை நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி பிறப்பித்துள்ளாா்.