சென்னை: சென்னை மாநகராட்சி முன்பு போராடி வந்த தூய்மை பணியாளர்கள் நேற்று இரவு வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், தவெ கதலைவர் விஜய், இது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சி காட்டமாக விமர்சித்துள்ளார்.

அதுபோல பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது வீரமல்ல… கோழைத்தனம்- போராட்டக் குழுவினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேசியிருக்க வேண்டும். திமுக அரசை தமிழ்நாட்டு மக்கள் அகற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை என சாடியுள்ளார்.

சென்னை ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை. உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். அவர்களை வேறு இடத்திற்கு சென்று போராட நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அதை ஏற்க மறுத்து தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராடியதால், அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைது செய்தனர். இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில்,   தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம் என தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,  தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம்!

குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும் போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்குப் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தெரிகிறது. காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியையும் சிகிச்சையையும் உடனடியாக வழங்கி, அவர்களின் உடல்நலத்தைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு இடங்களில் தங்களின் குடும்பத்தினரோடு கூடத் தொடர்புகொள்ள முடியாத வகையிலும் எவ்வித உதவிகளும் கிடைக்காத வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தினரோடு கூடத் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்க, தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? ஆளும் அரசுக்கு மனசாட்சி சிறிதளவேனும் இருக்கிறதா? இந்தக் கொடூரமான நடவடிக்கையைப் பார்த்தால் தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சிதான் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றச் சொல்லித் தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள். அதை ஏன் இன்னும் நீங்கள் நிறைவேற்றவில்லை? அப்படிக் கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்?

அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும் என கூறி உள்ளார்.

இதுகுறித்து, பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தியும் சென்னை மாநாகராட்சி அலுவலகத்திற்கு அருகில் அறவழியில் கடந்த 12 நாள்களாக போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினரைக் கொண்டு நள்ளிரவில் கைது செய்து தமிழக அரசு அப்புறப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

உரிமை கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது; மன்னிக்க முடியாதது. தமிழக அரசு நினைத்திருந்தால் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு முதல் நாளிலேயே தீர்வு கண்டிருக்க முடியும். சென்னை மாநகரில் குப்பை அகற்றும் பணியை மாநகராட்சியே மேற்கொள்ள வேண்டும். தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. இதை நிறைவேற்றுவதில் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. இன்னும் கேட்டால் குப்பை அகற்றும் தனியார் நிறுவனத்திற்கு தரும் தொகையில் தூய்மைப்பணிகளை இன்னும் சிறப்பாக செய்ய முடிவதுடன், அவர்களுக்கு கூடுதல் ஊதியமும் வழங்கமுடியும். ஆனால், அதைச் செய்ய அரசுக்கு மனமில்லை.

தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 12-ஆம் நாளாக நீடித்த நிலையில், போராட்டக் குழுவினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேசியிருக்க வேண்டும். அவ்வாறு பேசியிருந்தால் இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்திருக்கக் கூடும். ஆனால், முதலமைச்சருக்கோ திரைப்படங்களைப் பார்ப்பதற்கே பொழுதுகள் போதவில்லை. ஒருவேளை சமூகநீதியில் சிறந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் தூய்மைப் பணியாளர்களை சந்தித்துப் பேசுவது தமக்கு தகுதி குறைவு என்று நினைத்து விட்டாரோ என்னவோ? ஒன்று மட்டும் உறுதி. ஏழை எளிய மக்களான தூய்மைப் பணியாளர்களை அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு அகற்றுவது வீரம் அல்ல… கோழைத்தனம்.

அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான் வீரம் ஆகும். அதை செய்யாமல் அடக்குமுறையை ஏவி அவர்களை அகற்றிய திமுக அரசை தமிழ்நாட்டு மக்கள் அகற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை. இவ்வாறு கூறி உள்ளார்.

தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா  வெளியிட்டுள்ள அறிக்கையில்,   “தீவிரவாதிகளை கைது செய்வது போல நள்ளிரவில் தூய்மை பணியாளர்களைக் கைது செய்துள்ளது எந்த விதத்தில் நியாயம்? 12 நாட்களாகச் சம்பள உயர்வுக்காகவும், நிரந்தர பணி வழங்கிடவும் போராடிய தூய்மை பணியாளர்களை இரவோடு இரவாகக் கைது செய்தது மிக மிக கண்டனத்திற்குரிய ஒரு விஷயம்.

உடனடியாக முதலமைச்சர், துறை சார்ந்த அமைச்சர்களும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். இன்றைக்கு மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். தங்கள் உரிமைக்காக போராடிய தூய்மை பணியாளர்களுக்கு இந்த அரசு நிச்சயம் அவர்கள் கோரிக்கைக்குச் செவி சாய்த்து உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம். நள்ளிரவில் கைது செய்ததை தேமுதிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம் என கூறியுள்ளார்.