சென்னை : அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதமானது என பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

பாமகவில் கட்சியை கைப்பற்றுவதில் தந்தை மகனுக்கும் இடையே மோதல் போக்கு உச்சமடைந்துள்ளது. இதனால் கட்சி தொண்டர்கள் இரண்டாக பிரிந்து, செயலாற்றி வருகின்றனர். பலர் மாற்றுக்கட்சிகளை தேடி சென்றுகொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் பொதுக்குழு கூடுவதாக அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு மாற்றாக அன்புமணி முன்னதாக ஆகஸ்டு 9ந்தேதி அன்று பொதுக்குழுவை கூட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் இரு தரப்புக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.
இந்த நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் நடத்திய பொதுக்குழு கூட்டம் சட்டவிரோதமானது என இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
அவரது புகார் கடிதத்தில், ராமதாஸ் தரப்பின் குற்றச்சாட்டுகளின்படி, கட்சியின் நிறுவனரான தனக்கு அழைப்பு விடுக்கப்படாமல் அன்புமணி பொதுக்குழுவை நடத்தியதாகவும், இது கட்சி விதிகளுக்கு முரணானது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் ஒரு வருடத்திற்கு பதவிக்காலத்தை நீட்டித்தது சட்டவிரோதமானது என்றும், அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கவோ அல்லது இடைநீக்கம் செய்யவோ குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அன்புமணி மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கோரியுள்ளார். இந்த புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமதாசின் பாமக பொதுக்குழுஅறிவிப்புக்கு எதிராக போட்டி பொதுக்குழு! அன்புமணி அறிவிப்பு…