காசா நகரத்தை கைப்பற்றும் திட்டத்தை இஸ்ரேல் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை “இன்னும் இரத்தக்களரியை மட்டுமே கொண்டு வரும்” என்று எச்சரித்துள்ளார்.

பாலஸ்தீன பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஸ்டார்மர் இவ்வாறு கூறியுள்ளார்.
“காசாவில் தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் முடிவு தவறானது, அதை உடனடியாக மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என்று ஸ்டார்மர் இன்று காலை கூறினார்.
மேலும், ‘இந்த நடவடிக்கை இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவரவோ அல்லது பணயக்கைதிகளை விடுவிப்பதைப் பாதுகாக்கவோ எதுவும் செய்யாது. இது மேலும் இரத்தக்களரியை மட்டுமே கொண்டு வரும்,’ என்று தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளாவிட்டால் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக ஸ்டார்மர் ஏற்கனவே அச்சுறுத்திய நிலையில் பிரிட்டன் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் அளிக்க முன்வந்தால் இங்கிலாந்துடன் பாதுகாப்பு உறவுகளை துண்டிப்பது குறித்து இஸ்ரேல் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.