சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான இரு சுற்று கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை 22 பொறியியல் கல்லூரி களில் ஒரு மாணவர்கூட சேராத நிலை உருவாகி உள்ளது.
கல்லூரிகளின் இந்த நிலைமைக்கு காரணமாக, தரமற்ற கட்டமைப்பு, போதிய பேராசிரியர்கள் இல்லாமை என்பதுடன், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே குறைந்து வரும் பொறியியல் மோகம் என்றும் கூறப்படுகிறது. கல்லூரியின் கட்டமைப்பு என்பது அதன் நிர்வாக, கல்வி, மற்றும் பிற வசதிகளை குறிக்கிறது. இதில் முதல்வர், பேராசிரியர்கள், பாடத்திட்டங்கள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம், விளையாட்டு மைதானம், விடுதி போன்ற வசதிகள் அடங்கும்.

2025-26 ஆம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்ற 421 உடன் மொத்தம் 423 கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்ற நிலையில், அதில் 22 கல்லூரிகளில் ஒரு மாணவரும் சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 148 பொறியியல் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 10 விழுக்காடு இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 56 கல்லூரிகளில் 90 விழுக்காடும், 82 கல்லூரிகளில் 80 விழுக்காடும், 147 கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களிலும் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக,, தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ. (B.E) மற்றும் பி.டெக் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை பெறப்பட்டன. அதன் அடிப்படையில் ஜூன் 27 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியானது.
தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க 3,02,374 மாணவர்கள் பதிவு செய்தனர். அவர்களில் 2,41,641 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 47,372 மாணவர்களுக்கும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.
சிறப்புப் பிரிவு கலந்தாய்வைத் தொடர்ந்து, பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 14 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் பொது கலந்தாய்வின் முதல் சுற்று நிறைவடைந்த பின்னர், 30 ஆயிரத்து 96 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர இறுதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டு கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
இரண்டாம் கட்ட கட்ட கலந்தாய்வின் முடிவில் 92,423 இடங்கள் நிரம்பி உள்ளன. இதனைத் தாெடர்ந்து 12-ஆம் துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும், ஏற்கனவே பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பம் செய்யாமல் இருந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கும், துணைக்கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் 23-ஆம் தேதி வரையில் நடத்தப்படுகிறது.
ஆதிதிராவிடர் அருந்ததியருக்கான நிரப்பப்படாத இடங்களில் ஆதிதிராவிடர் பிரிவினரை சேர்ப்பதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25,26 ஆகியத் தேதிகளில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.