இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்வதாக கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் தில்லு முல்லுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் கூறியிருந்தார்.

தேர்தல் ஆணையத்தின் தரவுகள் எட்டடுக்கு பாதுகாப்புடன் பத்திரமாக உள்ளதாகவும் அது போன்ற ஆதாரங்கள் எதுவும் ராகுல் காந்தியிடம் இல்லை என்றும் பாஜக தலைவர்கள் கூறினர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையத்தில் கேட்டபோது மின்னணு தரவுகளை வழங்க மறுத்து அச்சிடப்பட்ட தாள்களில் உள்ள வாக்காளர் விவரங்களை மட்டுமே வழங்கியது.
மலைபோல் இருந்த தாள்களில் இருந்து வாக்காளர் விவரங்களை மின்னணு மயமாக்க முடியாத வகையில் வழங்கப்பட்டது.

தேர்தல் முடிவுகளில் இருந்து தேர்தல் கணிப்புகள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதோடு கட்சியின் கணிப்புகளின்படி வெல்ல வேண்டிய தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பை இழந்ததால் இந்த வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்கள் ஒவ்வொன்றையும் கையால் சரிபார்க்க தீர்மானிக்கப்பட்டது.
அதில் குறிப்பாக கர்நாடகாவின் மகாதேவ்புர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனால் இங்கு காங்கிரஸ் வெற்றிபெறும் என்று கட்சி வட்டாரங்கள் உறுதியாக நம்பியிருந்தது.
இங்கு 11965 போலி வாக்காளர்கள் இருப்பதும் இவர்கள் அனைவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் வெவ்வேறு மாநிலங்களிலும் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

போலி முகவரியுடன் 40009 வாக்காளர்கள் இருந்ததும் இதில் பலரின் முகவரி வெற்றிடமாக இருப்பதை தவிர்க்க ‘0’ பூஜ்யம் என்று பதிவிடப்பட்டிருந்தது.
ஒரே முகவரியில் பல்வேறு சமூகங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த பெருமளவிலான வாக்காளர்கள் என 10452 பேர் பட்டியலில் இருந்தனர், இவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டதில் அந்த முகவரியில் அப்படி யாரும் இல்லை எனபது தெரியவந்துள்ளது.
தவிர, முதல்முறை வாக்காளர்கள் என்ற பெயரில் 33692 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர், இதில் 70 வயதானவர்கள் கூட புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர், ஆனால் இவர்கள் இதற்கு முன் எங்கிருந்தார்கள் ஏன் அவர்கள் இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்படவில்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள இந்த தில்லு முல்லுகள் குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள தரவுகள் அரசியல் கட்சியினர் மட்டுமன்றி நாடு முழுவதும் பொதுமக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தில்லுமுல்லுகள் மூலம் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றதாக குற்றம்சாட்டியுள்ள ராகுல் காந்தி, பிரதமர் மோடி இதற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.