டெல்லி: அமெரிக்க அதிபர் இந்தியா மீது அதிக வரிகளை விதித்து மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் மோடி பேசியுள்ளார்.
எந்தவொரு காலத்திலும், இந்தியாவின் விவசாயத் துறை சமரசம் செய்யப்படாது என்று கூறியதுடன், விவசாயிகளின் நலனுக்காக எதையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.
அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் 25 சதவிகித வரி விதிப்பு நடவடிக்கை, இன்று முதல் இந்திய பொருட்களின் மீது அமலுக்கு வந்துள்ளது. கூடுதல் வரியானது வரும் 27ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இது இந்தியாவில் இருந்து அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கு பெரும் சுமையாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் விஞ்ஞானி சுவாமிநாதனின் மகளும், MSSRFன் தலைவர் சௌமியா சுவாமி நாதன் முன்னிலையில், இன்று நடைபெற்ற மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (MSSRF) ஏற்பாடு செய்துள்ள மூன்று நாள் அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும், , 2011 ஆம் ஆண்டு மறைந்த எம்.எஸ். சுவாமிநாதன் எழுதிய ” இன் சர்ச் ஆஃப் பயோஹேப்பினஸ்” என்ற புத்தகத்தின் மறுபதிப்பை வெளியிட்டார். மேலும் எம்.எஸ்.சுவாமிநாதன் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தையும் வெளியிட்டார். இந்த மாநாட்டில் 30 சர்வதேச பேச்சாளர்கள், 120 தேசிய நிபுணர்கள் மற்றும் 300 விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றி பிரதமர் மோடி, அமெரிக்க அதிபரின் வரி மிரட்டலுக்கு பதில் அளிக்கும் வகையில் உரையாற்றினார். அதிபர் டிரம்பின் மிரட்டல் போக்கைத் தொடர்ந்து பிரதமரின் இன்றைய பேச்சு முக்கியமாக பார்க்கப்படுகிறது.
டெல்லியில் நடைபெற்ற இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “விவசாயிகளின் நலனே எங்கள் முதன்மையான முன்னுரிமை. இந்தியா அதன் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் மீனவர்களின் நலன்களுடன் ஒருபோதும் சமரசம் செய்யாது. இதற்காக நான் தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நான் அதற்கு தயாராக இருக்கிறேன். நாட்டின் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் நலனுக்காக இந்தியா தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

பருத்தி, சோளம் மற்றும் சோயா பீன்ஸ்களை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதி கேட்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்காவின் பருத்தி, சோளம், சோயாவை இறக்குமதி செய்தால் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அமெரிக்க வேளாண் பொருள் இறக்குமதிக்கு சம்மதம் தெரிவிக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய விவசாயிகள் நலனில் ஒரு போதும் மத்திய அரசு சமரசம் செய்து கொள்ளாது. இந்திய விவசாயிகளின் நலனுக்கே எப்போதும் மத்திய அரசு மிகவும் முன்னுரிமை கொடுக்கும் என்றும் விவசாயிகளின் நலனுக்காக என்னுடைய தனிப்பட்ட நலன்களில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தியா இன்று அதன் மீனவர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் இந்த நாட்டின் ஒவ்வொரு விவசாயிக்கும் தயாராக உள்ளது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், சாகுபடி செலவைக் குறைப்பதற்கும், புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்குவதற்கும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். விவசாயிகளின் வலிமையை நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளமாக எங்கள் அரசாங்கம் கருதுகிறது.”
இந்தியா அமெரிக்காவிற்கு பல்வேறு வகையான விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இந்த நிலையில் ட்ரம்ப் அறிவித்துள்ள 50 சதவிகித வரிச்சுமையால் பாதிக்கப்படும் துறைகளில் விவசாயமும் பிரதானமாக உள்ளது. பொருளாதார தடைகளை மீறி ரஷ்யாவுடன் எண்ணெய் வாங்குவதே கூடுதல் வரிக்கு காரணம் என அமெரிக்கா கூறுகிறது. ஆனால், சந்தை சூழலின் அடிப்படையில் 140 கோடி மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. அதனை காரணமாக குறிப்பிட்டு கூடுதல் வரி விதிப்பது நியாயமற்றது என வெளியுறவுத்துறை விளக்கமளித்துள்ளது.
இங்கிலாந்துடன் மேற்கொள்ளப்பட்டதை போன்றே அமெரிக்காவுடனும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்தியஅரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. அப்போது, தங்கள் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட விவசாய பொருட்கள் மற்றும் அசைவ பாலை இந்திய சந்தைக்கு கொண்டு வர அமெரிக்கா ஆர்வம் காட்டியுள்ளது. இதனால் உள்ளூர் விவசாயிகள் நஷ்டமடைவதோடு, மத உணவுர்வுகளும் பாதிக்கப்படும் என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க வேளாண் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி இல்லை என்பதில் மோடி உறுதியுடன் உள்ளதாகவும், அதனால்தான், இந்திய விவசாயிகளின் நலனுக்காக எவ்வளவு விலை கொடுக்கவும் மத்திய அரசு தயார், விவசாயிகளை கைவிடப்போவதில்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளதுடன், .இந்திய பொருட்களுக்கு எவ்வளவு கூடுதல் வரி விதித்தாலும் அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை” என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
இதன் விளைவாகவே இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை பாதியிலேயே நின்றுள்ளது. டிரம்பும் இந்தியா மீது கூடுதல் வரி விதித்து அழுத்தம் கொடுத்து வருவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவின் கூடுதல் 25% வரி விதிப்பு நியாயமற்றது, காரணமற்றது. ரஷியாவிடம் எண்ணெய் இறக்குமதி செய்வது, முழுவதும் சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டது. சந்தை நிலவரத்தை பொறுத்தும், 1.4 பில்லியன் இந்தியர்களின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்திலும் நாம் சில முடிவுகளை எடுக்கிறோம் என்பதை எடுத்துரைத்து, இவ்விஷயத்தில் நம் நிலைப்பாடு என்ன என்பதை உறுதியாக ஏற்கெனவே சொல்லிவிட்டோம்
இருந்தும் அமெரிக்கா இன்று எடுத்துள்ள நடவடிக்கைகள் முழுக்க முழுக்க நியாயமற்றவை தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கும்” என குறிப்பிட்டுள்ளது.