சென்னை:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையை நாளை வெளியிடுகிறார். இந்த கல்வி கொள்கையில்,  இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

முன்னதாக, திமுக அரசு பதவி ஏற்றதும், கடந்த 2022ம் ஆண்டு, மாநில கல்விக்கொள்கையை உருவாக்க,  ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட  கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக ஆய்வு செய்து, சுமார்  650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 2024ம ஆண்டு  ஜூலை மாதம் முதலமைச்சர் ஸ்டாலிடம் சமர்ப்பித்தது.

இதைத்தொடர்ந்து, அந்த கல்விக்கொள்கை குறித்து முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.  அந்த அறிக்கையில், 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது என்றும் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தது.

மேலும், தமிழ்நாட்டில்,   நீட் தேர்வு கூடாது, நீட் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களை விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும். பள்ளிக்கல்வி யில் தமிழ் மொழியை முதல் மொழியாக நிலைநிறுத்துவது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மாநில கல்வி கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.