இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலும் 25% வரி விதிப்பது குறித்த நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று கையெழுத்திட்டிருப்பதாகத் செய்தி வெளியாகி உள்ளது.

இதன் மூலம் இந்தியா மீதான மொத்த வரியை 50% வரை உயர உள்ளது, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏற்கனவே ஆகஸ்ட் 1 முதல் 25% கூடுதல் வரி விதிக்கப்பட்டது.

“இந்தியா தனது ராணுவ தளவாடங்களின் பெரும்பகுதியை எப்போதும் ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது, மேலும் ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தியை மிகப்பெரிய அளவில் வாங்குகிறது” என்று டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

“இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. அவர்கள் தங்கள் இறந்த பொருளாதாரங்களைப் புதைக்க ஒன்றாகக் குழி தோண்டுகிறார்கள்” என்றும் எச்சரித்தார்.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியா ரஷ்யாவுக்கு நிதியளிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த இந்த வெளியுறவு அமைச்சகம், “இந்தியாவை விமர்சிக்கும் நாடுகளே ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன” என்று விளக்கமளித்தது.

ரஷ்யா உடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் வர்த்தகம் குறித்து அதிபர் டிரம்பிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் இதுகுறித்து செய்தியைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்பது போல் டிரம்ப் பதிலளித்தார்.

இந்த நிலையில், பிரிக்ஸ் வர்த்தகக் குழுவில் இந்தியாவின் பங்கை விமர்சித்துள்ள டிரம்ப் “அமெரிக்காவிற்கு எதிரான” இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள இந்தியா மீது ஏற்கனவே விதித்துள்ள வரியை விட கூடுதலாக 25% அதாவது மொத்தம் 50% வரி உயர்வை அறிவித்துள்ளார்.