இன்று ஆடிப்பெருக்கு (ஆடி 18) தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.  வேளாண் பண்பாட்டின் அடையாளளமாக கொண்டாடப்படுவது ஆடிப்பெருக்கு; பொதுவாக கடந்த காலங்களில் ஆடிப்பெருக்கு என்பதை விவசாயிகள் மட்டுமே கொண்டாடி வந்தனர். இன்றைய தினம் பயிர் பயிரிட்டால், அது மென்மேலும் வளர்ந்து நாடு செழித்தோங்கும் என்று நம்பி, இன்றைய தினம்  பயிர்களை விதைத்தனர். ஆனால், நவீன காலத்தில், மக்கள் ஆடை ஆபரணங்கள் வாங்குவதிலேயே அதிக நாட்டம் கொள்கின்றனர். இருந்தாலும், இன்றைய தினம்  புதிய தொழிலை  தொடங்கினாலோ, செல்வங்களை சேமித்தாலோ அது மென்மேலும் வளரும் என்பது மக்களின் நம்பிக்கை.

ஆடி மாதம் என்றாலே ஆன்மிகம்தான். இந்த மாதம்   இறை வழிபாட்டுக்கான மாதமாக திகழ்வது ஆடி மாதம். ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் வரிசையில் முக்கிய நிகழ்வு ஆடிப் பெருக்கு வழிபாடு. ஆடி 18, பதினெட்டாம் பெருக்கு என அழைக்கப்படும் இந்த நிகழ்வின் முக்கிய அம்சம் குல தெய்வ வழிபாடு மற்றும் நதி, ஆற்றங்கரை வழிபாட்டை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

சூரியன், புதன் சேர்க்கை நடைபெறும் நாளே ஆடிப்பெருக்கு என்பதால் நவ தானியங்கள் வாங்கி வீட்டில் வைத்து வழிபடலாம். ஆடிப்பெருக்கு என்று குபேரருக்கு குபேர நாணயங்கள் வைத்து அர்ச்சனை செய்து குபேர பூஜை செய்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

 கோடையில் வறண்ட காற்று வெம்மையுடன் வீசும்; ஆறு, குளம், குட்டைகள் அனைத்தும் காய்ந்து, வறண்டு போயிருக்கும்; விளை நிலங்கள், மழைத்துளிக்காக வானம் பார்த்து காத்திருக்கும்; ஆடி மாதம் பிறக்கும் போது, புது மழை பெய்து, ஆறு, ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளில் புது வெள்ளம் பாயும்; இந்த நீர், விளை நிலங்களில் புதிய விளைச்சலுக்கு ஏதுவாக இருக்கும் என்பதால், அந்நீருக்கு நன்றி சொல்லி, வணங்கி, விதைப்பை துவக்குவர் விவசாயிகள்.விவசாயிகளுக்கான அந்த நன்னாள் தான் ஆடிப்பெருக்கு. இந்த நாளில் துவங்கும் செயல் எதுவெனினும் பல்கிப்பெருகும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.

இதுமட்டுமின்றி  குறிப்பாக நெல் சாகுபடிக்கு பெயர்போன காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில், புதுமண தம்பதிகள், காவிரித்தாயை போற்றும்  வகையில்,  அதிகளவில் கூடி வழிபாடு நடத்துவதுடன்,   பொதுமக்கள் காவிரி ஆற்றில் நீராடியும், புதுமண தம்பதிகள் புத்தாடை உடுத்தி புதிய மஞ்சள் கயிறு அணிவது வழக்கம்.  இதற்காக ஏராளமான புதுமண தம்பதிகள் தங்களது குடும்பத்தினருடன் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம். இதனால் குடும்பம் மற்றும் விவசாயம், தொழில் செழிக்கும் என்பது ஐதீகம்.

காவிரிக்கு நடத்துகிற இந்த வழிபாடு அனைத்து வரங்களையும் வழங்கும். குழந்தை பேறு, திருமண பேறு கிடைக்கும். அஷ்ட ஐஸ்வர்யம் தேடி வரும்.

ஆடிப் பெருக்கு நாளில் தம்பதிகள் நீராடி இறைவனை வழிபட்டு வந்தால் ஒற்றுமையுடன் இருப்பார்கள் என்பது நம்பிக்கை. அதுபோல ஆடிப்பெருக்கு நாளில் நீர் நிலைகளில் நீராடி இறைவனை வழிபட்டு முன்னோர்களின் ஆசீர்வாதத்தையும் பாவங்களை போக்கி வாழ்வில் நல்ல புண்ணியம் பெறலாம்.

ஆடிப்பெருக்கு என்பது பெருக்கத்திற்கான ஒரு மங்களகரமான நாளாகும். இந்த நாளில் செய்யப்படும் வழிபாடு வாங்கும் பொருள் என அனைத்தும் பெருகிக் கொண்டே போகும், என்பதால் இந்த நாளில் பெண்கள் தங்கள் ஆயுள் அதிகரிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு தாலிக்கயிறு மாற்றிக்கொள்ளும் பழக்கம் உள்ளது.

ஆடிப்பெருக்கு நாள் அட்சய திருதியை நாளுக்கு இணையான நாளாக கருதப்படுகிறது . இந்த நாள் பலரும் நல்ல விஷயங்களை துவக்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். தங்கம் வெள்ளிப் பொருட்களை வாங்கி வீட்டில் வைக்கலாமா என நினைக்கிறார்கள். அதற்கு நிகரான மங்கலப் பொருட்களையும் வாங்கியும் வீட்டில் வைக்கலாம்.

அதுபோல இன்றைய தினம்   வீட்டில் தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் குறையாமல் இருக்கும்படி வாங்கி நிரப்பி வைக்கலாம்.

ஆடிப்பெருக்கு அன்று நகை வாங்க முடியாதவர்கள் மஞ்சள் கிழங்கு சிறிது வாங்கி வைக்கலாம். தங்கத்திற்கு இணையான மஞ்சள் வீட்டில் செல்வத்தை பெறுக செய்யும். ஆவணி மாதத்தில் திருமணம் வைப்பவர்கள் அதற்கு தேவையான புடவை , நகை போன்ற பொருட்களை ஆடிப்பெருக்கு நாளில் வாங்கலாம்.

இன்றைய தினம் காவிரி கரையோரம் எம்பெருமான் ஸ்ரீரங்கநாதர் வீற்றிருக்கும்,  ஸ்ரீரங்கத்தில் அருள் பாலிக்கும் பெருமாளை ஆடி 18 அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து அன்று மாலை புடவை திருமணம் ஏற்றி ஸ்ரீரங்கம் கோயில் இருந்து அம்மா மண்டபம் படித்துறைக்கு கொண்டு வருவார்கள்.

ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க வசிஷ்ட முனிவர் கூறியபடி காவிரியில் நீராடி நாள் ஆடிப்பெருக்கு என்று ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.