சென்னை: பிரதமரை சந்திக்க அனுமதி வழங்கக்கோரி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு 6 முறை போன் செய்தேன்.. அவர் எனது போனை எடுக்கவில்லை என தெரிவித்துள்ள ஓடிபஎஸ், நயினார் நாகேந்திரன் பொய் பேசுவதை தவிர்த்து, இனியாவது உண்மை பேச வேண்டும் என்பதே தனது விருப்பம் என ஓபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், பிரதமர் மோடியை சந்திக்க முயன்றார். ஆனால், மோடி அவரை சந்திக்க மறுத்த நிலையில், கோபமடைந்த ஓபிஎஸ் திமுக கூட்டணியில் இணையும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதுடன், பாஜக உடனான கூட்டணியை முறித்து கொள்வதாக அறிவித்ததுடன், ஒரே நாளில் மூன்றுமுறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதன்மூலம் ஒபிஎஸ் தரப்பு திமுகவில் ஐக்கியமாகும் அல்லது திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் என கூறப்படுகிறது.
ஓபிஎஸ் நடவடிக்கை தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் திமுகவுக்கு தாவி வரும் நிலையில், தேமுதிகவும் திமுக கூட்டணியில் சேரும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், ஓபிஎஸ்சும் திமுக கூட்டணிக்கு செல்ல முயற்சித்து வருவது அதிமுக பாஜக கூட்டணிக்கு இழப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இதன் காரணமாக, ஓபிஎஸ் தன்னிடம் கூறியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் என மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். ஆனால், அவர் கூறுவதில் எள்ளளவும் உண்மை இல்லை என ஓபிஎஸ் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக ஓபிஎஸ் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் “தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். இதில் எள்ளளவும் உண்மை இல்லை. எனவே, இது குறித்த உண்மை நிலையை தெரிவிக்க விரும்புகிறேன். நயினார் நாகேந்திரனை ஆறு முறை கைபேசியில் தொடர்பு கொள்ள நான் முயற்சித்தேன். ஆனால், அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை. எனவே, அவரிடம் பேச வெண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதற்கும் நயினார் நாகேந்திரன் எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் மற்றும் கழக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோரை கலந்தாலோசித்த பின்னர், பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு 24-07-2025 அன்று நான் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது.
உண்மையிலேயே, நயினார் நாகேந்திரனுக்கு பிரதமரை நான் சந்திக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்குமேயானால், நான் கைபேசியில் அழைத்த அழைப்பை பார்த்தோ அல்லது குறுஞ்செய்தியின் அடிப்படையிலோ என்னிடம் பேசியிருக்கலாம். அல்லது எனது கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அதற்கான ஏற்பாட்டினை செய்திருக்கலாம். ஆனால் எதையும் செய்யவில்லை.
இதிலிருந்து, நான் பிரதமரை சந்திப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. எனவே, பிரதமரை சந்திப்பது தொடர்பாக நான் நயினார் நாகேந்திரனிடம் சொல்லவில்லை என்பது சரியல்ல, உண்மைக்கு புறம்பானது. நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கிறார். ஆகவே, இனியாவது அவர் உண்மை பேச வேண்டும் என்பதே எனது விருப்பம்”.
இவ்வாறு கூறியுள்ளார்.