சென்னை: உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாகி இருப்பது சிறப்பான ஒன்று என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


மத்திய அரசின் சார்பில் 15வது உடலுறுப்பு தானம் தின நிகழ்ச்சியில், உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் ஜேபி நட்டா விருது வழங்கி கவுரவித்தார்.

இந்த நிலையில், உடலுறுப்பு தானம் செய்து பலரின் உயிர்களை வாழ வைத்தவர்களை நினைவு கூர்ந்து, எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  உயிர் பிரிந்த பின் தமது உடற்பாகங்கள் தீக்கும் மண்ணுக்கும் இரையாகாமல், பிறரது வாழ்வுக்குத் துணையாவதே பெருவாழ்வு! அதனால்தான், துணை முதலமைச்சராக இருந்தபோது, எனது உடலுறுப்புகளைக் கொடையளித்தேன்; முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், உடலுறுப்புகளைக் கொடையளிப்போருக்கு அரசு மரியாதையுடன் விடை கொடுக்கப்படும் என்று அறிவித்தேன்.

2023 செப்டம்பர் 23-இல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது முதல், இதுவரையில் 479 பேர் (கடந்த ஆண்டு மட்டும் 268 பேர்) தங்களது உடலுறுப்புகளை ஈந்து, பல நூறு உயிர்களை வாழ வைத்திருக்கிறார்கள்! அவர்களுக்கு எனது வணக்கம்! #OrganDonation-இல் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகி இருப்பது கூடுதல் சிறப்பு!

இவ்வாறு கூறியுள்ளார்.