சென்னை: பாமகவில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பத்துக்கு காரணம் பாஜக என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குற்றம்சாட்டி உள்ளார்.
குனியமுத்தூர்: கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா, இந்திய அரசியல் அமைப்பை காப்போம், 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் ஆயத்தம் ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் கோவை சுண்டக்காமுத்தூரில் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்துக்கு கோவை மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் சுண்டக்காமுத்தூர் முருகேசன் வரவேற்றார். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மாநில துணைத் தலைவருமான அழகுஜெயபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்திராக கலந்துகொண்ட காங்கிரஸ் எம்எல்ஏவும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் மக்கள் விரோத போக்கால் தமிழக மக்கள் கடந்த 11 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலுக்கு மத்திய அரசின் உளவுப்பிரிவு கவனக்குறைவு தான் முழு காரணம் ஆகும். தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. நிதி ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் கோடி நிதியை தராமல் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது.
கல்வி நிதி ரூ.2,138 கோடியை தராமல் வேண்டுமென்றே இழுத்தடிக்கிறது. தமிழக மாணவர்களின் கல்வி உரிமையோடு மத்திய பா.ஜ.க. அரசு விளையாடுகிறது. கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் மண்ணில் தமிழனுக்கு இந்த அவலநிலை கேட்டால், இந்தி படிக்கவில்லை, அதனால் நிதி தரவில்லை என இறுமாப்புடன் பதில் அளிக்கிறார்கள். எந்தமொழி படிக்க வேண்டும் என்பது அவரவர் உரிமை. இதில் யாரும் தலையிட முடியாது.
பா.ஜ.க.விடம் கூட்டணி அமைக்கவில்லை என்பதால் மத்திய அரசின் சூழ்ச்சி காரணமாக பா.ம.க. கட்சியிலும், குடும்பத்திலும் பெரும் குழப்பம் ஏற்பட்டள்ளது. அவர்களோடு ஒட்டுறவு வைத்தால் இந்தநிலை தான் பிற கட்சிகளுக்கும் ஏற்படும். மத்திய பா.ஜ.க. அரசு தனது சர்வாதிகார போக்கினால் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் வளைத்துவிடலாம் என பகல் கனவு காண்கிறது. எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் பா.ஜ.க.வின் சித்துவிளையாட்டு தமிழ்நாட்டில் எடுபடாது. வருகிற 2026 தமிழக சட்டசபை பொதுத்தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியே வெல்லும். மீண்டும் காங்கிரஸ் துணையுடன் தி.மு.க. ஆட்சி தான் மலரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் முறையிலான அடையாள அட்டையை மாநில தலைவர் செல்வபெருந்தகை வழங்கினார்.
முன்னதாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகள் குறித்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக்கணக்குக்குழுவின் ஆய்வுக்கூட்டம் (30.07.2025) வால்பாறை நகராட்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் துறை உயர்அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.