சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, அரசியல்  அனாதையாகி  உள்ள முன்னாள் முதல்வரும், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஓபிஎஸ்-ஐ அதிமுக பாஜக என எந்தவொரு கட்சியும் கண்டுகொள்ளாத நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து தனது எதிர்கால திட்டத்தை அறிவிக்க போவதாக கூறி உள்ளார்.

இதனால், இன்றைய ஓபிஎஸ்-ன் பிரஸ்மீட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓபிஎஸ்-ன் மகன் திமுக ஆதரவாளராக இருந்து வரும் நிலையில், ஒபிஎஸ்-ஐ திமுகவுக்கு இழுக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மற்றொரு தருப்பு ஓபிஎஸ்-ஐ விஜய் கட்சியா தவெகவுக்கு இழுக்கவும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இதை இரண்டை விடுத்து, சசிகலாவுடன் இணைந்து தனிக்கட்சியை தொடங்கலாமா அல்லது  மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகி விடலாமா  என்று அவர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஓபிஎஸ்-ஐ ஏற்கனவே எடப்பாடி உள்பட அதிமுக மூத்த தலைவர்கள் ஓரம் கட்டிய நிலையில், பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்களும் அவரை சந்திக்க மறுத்து புறக்கணித்து வருகின்றனர். சமீபத்தில் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடிகூட ஓபிஎஸ்ஐ சந்திக்க மறுத்து விட்டார். இதனால் வெறுப்பில் உள்ள ஓபிஎஸ் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று அறிவிக்க போவதாக கூறி உள்ளார்.

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் அணி தொடர்ந்து நீடிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அனைத்து கேள்விகளுக்கும் இன்று ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்க உள்ளார். சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள சொகுசு விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் இன்று காலை 10 மணிக்கு ஓபிஸ் ஆலோசனை மேற்கொள்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்திக்க உள்ள அவர், கூட்டணி குறித்த நிலைப்பாடு மற்றும் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.