சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை மற்றும் ஓய்வு எடுத்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தலைமை செயலகம் வருகை தருகிறார். தொடர்ந்து பல்வேறு மக்கள் நல பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.

ஜூலை 21ந்தேதி அன்று காலை நடைபயணத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென தலைச்சுற்று ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு, கொளத்தூர் தொகுதிக்கு சென்றுகொண்டிருந்தபோது, மீண்டும் தலைச்சுற்று ஏற்பட்டதால், அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போலோ மருத்துவமனையில் கேன்சருக்கு ஏராளமான பரிசோதனைகள் மட்டுமின்றி, கேன்சர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் இதயம் தொடர்பான ஆஞ்சியோ பரிசோதனையும் செய்யப்பட்டது.
இதற்கிடையில், அவரது உடல்நிலை தேறியதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது அங்கிருந்தபடியே அரசு பணிகளை கவனித்தார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களுக்கு வந்திருந்த பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் அவரது உடல்நலம் தேசியதும், ஜூலை 27ந்தேதி அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் மேலும் 3 நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு பணிகளை கவனிக்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில், சுமார் 10 நாட்களுக்கு பிறகு, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மீண்டும் தலைமைச்செயலகம் வருகை தருகிறார். தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடக்கும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். பல்வேறு துறைகளின் முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.