ராமேஸ்வரம்
எடப்பாடிபழனிச்சாமி ஆட்சியில் கடனே வாங்கவில்லையா என தமிழக அமைச்சர் எ வ வேலு வினா எழுப்பியுள்ளார்.

நேற்று ராமேஸ்வரத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு செய்தியாளர்களிடம், ,
”ராமேஸ்வரம் தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்தை செயல்படுத்துவதற்கு ரூ.118 கோடி மதிப்பீட்டில் திட்ட வரைவு தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்தை செயல்படுத்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.
பாம்பன் கால்வாய் தூர்வாருதல் தொடர்பாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் அளித்த மனுவின் அடிப்படையில் முதல்வரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு விரைந்து மத்திய அரசிடம் நிதியை பெற்று கால்வாய் ஆழத்தை தூர்வாரி மீனவர்கள் நலனுக்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க திட்டமிடப் பட்டுள்ளது.
பாம்பன் கடலில் புதிய சாலை பாலம் அமைப்பது தொடர்பாக ஏற்கனவே திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு ஆய்வு செய்ததில் புதிய சாலை பாலம் வழித்தடம் அமைவதால் பாம்பன் பகுதியில் பல வீடுகள் சேதம் அடைய அதிக வாய்ப்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து வழித்தடத்தை மாற்று பாதையில் செயல்படுத்தி புதிய பாம்பன் சாலை பாலம் அமைப்பதற்கான திட்ட பணிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைந்து மத்திய அரசின் நிதி உதவி பெற்று புதிய பாம்பன் சாலை பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும்.
ஒரு அரசாங்கம் சமூக பணிகளை செய்யும் போது கடன் வாங்கித்தான் ஆக வேண்டும். எனது நண்பர் எடப்பாடி பழனிச்சாமி நான்காண்டு காலம் ஆட்சி செய்த போது கடனே வாங்கவில்லையா..? எந்த ஒரு அரசும் மக்களின் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு கடன் வாங்க தான் செய்யும். ஆனால் கடனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழக அரசு கடனை கட்டுக்குள் வைத்துள்ளது”
எனக் கூறியுள்ளார்.