ஆர்.எஸ்.எஸ். இல்லையென்றால் இந்தியா ஒரு முஸ்லிம் நாடாக மாறியிருக்கும் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக எம்.பி.யுமான ஜெகதீஷ் ஷெட்டர் சமீபத்தில் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் பிரியங்க் கார்கே, “ஆர்எஸ்எஸ் இந்திய நாட்டுக்கு செய்த 10 பங்களிப்பையாவது குறிப்பிடுங்கள்” என்று ஷெட்டருக்கு சவால் விடுத்துள்ளார்.

மேலும், “ஆர்.எஸ்.எஸ். நூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு அமைப்பு, ஆனால் ‘இந்து’ என்று அடையாளப்படுத்தும் மத நடைமுறைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன. இந்த உண்மை உங்களுக்குத் தெரியாதா?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
பசவண்ணாவின் தத்துவத்தில் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,
இந்தியா கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என இப்போதும் எப்போதும் மதச்சார்பற்ற கொள்கைகளைக் கொண்ட நாடாகவே இருக்கும் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.