மும்பை

காராஷ்டிர மாநிலத்தில் 14000 ஆண்களுக்கு மகளிர் உதவித்தொகை வழங்கி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி வழங்கும் ‘லாட்கி பகின்’ (அன்பு சகோதரி) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.  இது பா.ஜனதா தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்ததாக அந்த கூட்டணி தலைவர்களே கூறினர்.

மேலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதால் பயனாளிகள் தேர்வு பணி அவசர கோலத்தில் செய்து முடிக்கப்பட்டது. எனவே இதை பயன்படுத்தி தகுதியற்ற பலர் திட்டத்தில் இணைந்தது தெரியவந்தது. அதிலும் குறிப்பாக அரசு வேலை செய்யும் பெண்கள் பலர் இந்த திட்டத்தில் சேர்ந்து இருந்ததால் உடனடியாக அவர்களின் பெயர்களை நீக்க அரசு நடவடிக்கை எடுத்தது. அப்போது சுமார் 14 ஆயிரம் ஆண்கள் மோசடியாக இந்த திட்டத்தில் இணைந்து மாதாமாதம் ரூ.1,500 உதவித்தொகை பெற்று வருவது கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித்பவார் நேற்று செய்தியாளர்களிடம்,

“ஏழை பெண்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்ட ‘லாட்கி பகின்’ திட்டத்தில் ஆண்கள் பயனாளிகளாக இருக்க முடியாது. முறைகேடாக திட்டத்தில் சேர்ந்ததின் விளைவாக அவர்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை நாங்கள் திரும்ப பெறுவோம். அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்”

என்று தெரிவித்துள்ளார்.