சென்னை: இன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநிலங்களவை திமுக மற்றும் கூட்டணி கட்சியான மநீம எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக-வை சேர்ந்த பி.வில்சன், சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும், திமுக கூட்டணி சார்பில் மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பதவியேற்றனர். இவர்கள் கடந்த கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியின் ஆதரவுடன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறிய வாழ்த்து செய்தியில்; “I belong to the Dravidian stock” எனப் பேரறிஞர் அண்ணா முழங்கிய நாடாளுமன்ற மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாதங்களை – தமிழ்நாட்டின் உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்கும் நமது எம்.பி.,க்கள்!
திராவிடத் தூணாக முழங்கி விடைபெற்ற அண்ணன் வைகோ அவர்களது உரையில் உள்ளம் உருகி நெகிழ்ந்தேன்!
திரு.சண்முகம் – திரு.புதுக்கோட்டை அப்துல்லா ஆகியோரது பணிகளுக்குப் பாராட்டும்.
எம்.பி.,யாகத் தொடரும் மூத்த வழக்கறிஞர் வில்சன், புதிய குரலாக ஒலிக்கவுள்ள அருமை நண்பர் கமல்ஹாசன், சேலம் சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோருக்கும் வாழ்த்துகள்!.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.